உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா. இராமலிங்கம்
(கவிஞர் எழில் முதல்வன்)


'தலைவன் - ஒரு மதிப்பீடு '


கவிஞர் வெள்ளியங்காட்டானின் தலைவன் என்னும் பாவியம் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப் பெற்றுள்ள வெண்பா யாப்பிலான இனிய நூல். மிகச்சிறந்த மரபுக் கவிஞரான வெள்ளியங்காட்டான் தன் வாழ்வில் பட்டறிவினையும் கல்வியறிவினையும் இணைத்து இந்நூலை யாத்துள்ளார். நாட்டை நன்னெறிக்குய்விக்கும் நூல்கள் அண்மைக்காலத்தே தோன்றாத குறையினைப் போக்கி நிறைவு செய்ய வல்லது. தலைவன் என்னும் நூல். அறநெறிச் சிந்தனைகளையும் ஆன்மீகச் செய்திகளையும் ஆய்ந்து தெளிந்து எளிய வெண்பாவின் வாயிலாக வெளியிட்டுள்ள கவிஞரின் சமுதாயப் பணி போற்றுதற்குரியது.

அரசியல், பொருளியல் நோக்கில் தடம் புரண்டுவிட்ட இன்றைய உலகை நெறிப்படுத்த வேண்டும், என்ற கவிஞரின் உள்ள வேட்கையை இந்நூல் தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

       எவ்வழி நல்லவர் ஆடவர்
       அவ்வழி நல்லை வாழிய நிலனே

என்னும் புறநானுற்றுப் பொன் மொழியை நெஞ்சில் கொண்டு நோக்கின், தலைவனின் சிறப்பும் பண்பும் தெற்றெனப் புலப்படும். இந்நூல் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது.

24