உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்ற அடிகள் அவர்தமிழின்பால் கொண்டுள்ள காதலைப் புலப்படுத்த வல்லன. உரிய இடங்களில் பழமொழிகளையும் கதைக் குறிப்புகளையும் பயன்படுத்தி வெண்பாக்களை யாத்துள்ளார். தான் எடுத்துக்கொண்ட கதைக்கேற்ற வகையில் நிகழ்ச்சிகளை அமைத்து எளிமையான தெளிந்த நீரோட்டமாகத் தலைவன் எனும் இப்பாவியத்தை நடத்திச் செல்கிறார்.

முடிவாக கூறுவமாயின் தலைவன் எனும் இந்நூல் வழி இன்றைய உலகுக்குத் தேவையான கருத்துக்களான சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் எனும் மூன்று நிலைகளை மக்கள் உள்ளபடியே துய்த்திடவேண்டுமாயின் சமுதாயத்தில் அமைதி நிலவ வேண்டும். அந்த அமைதி நிலவிட ஊறுவிளைவிக்கும் சக்திகளைக் களைந்துமக்கள் நன்னெறிநிற்கவேண்டும். அந்த நெறியைப் பற்றிட அவர்களுக்குத் தேவை ஆன்றோர்கள் விட்டுச் சென்ற அரும்பெரும் கருத்துக்கள். அக்கருத்துக்களைத் தொகுத்து கதையோட்டத்துடன் ஆசிரியர் காவியமாக்கியுள்ளார். இந்நூல் இருபதாம் நூற்றாண்டில் தோன்றியுள்ள வெண்பா இலக்கியங்களில் குறிக்கத்தக்கதாகத் திகழ்கிறது.

மக்கள் முன்னேற்றத்தினையும் வாழ்க்கைச் சிக்கலுக்கான காரணங்களைப் பற்றியும் கவலைப்படாத இலக்கிய படைப்பாளர்களிடையே கவிஞர் வெள்ளியங்காட்டானின் தலைவன் உண்மையிலேயே அனைவருக்கும் தலைவனாகுந் தகுதியைப் பெறுவான். உண்மையான உழைப்பு, நற்சிந்தனை, நல்லொழுக்கம், நற்பண்பு ஆகியவற்றை வலியுறுத்தும் இந்நூலின் ஆசிரியரின் நோக்கமும் முயற்சியும் தமிழ்கூறு நல்லுலகம் போற்றிப் பயன் கொள்ள வேண்டும். பண்புடையார்ப்பட்டுண்டு உலகம் என்ற பொய்யா மொழிக்கேற்ப இந்நூலாசிரியரின் சீரிய நேரிய குறிக்கோளிற்கேற்ப இந்நூல் நின்று நலம் பல நல்கவல்லது. (1990)

29