பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நானோர் பாமரப்பெண். எனக்கு எதற்கு இத்துணை சுமை? கன்னித்தமிழ்க் கடலில் கண்டெடுத்தநல்முத்து மின்னின், கதிரோன் மெலிவான் - என எண்ணும் ஆழ்கடல் நம் தமிழ்க்கடல். இக்கடலில் நீந்தத் தெரியாத நான்-நானா முத்துக் குளித்து முகவுரை எழுதுவது? இல்லையில்லை அது என்னால் முடியாததுதான்.

என் நான்காண்டுக் கல்வியும், நாற்பதாண்டு நூற்பாலை உழைப்பும் நூலின் தரம் பார்க்க உதவுமேயன்றி, தமிழ் நூலைப் பதம் பார்க்க உதவாது. ஆயினும் குரல் வளமுள்ள ஒருவன் ஒரு பாடலை மனமுருகிப் பாடினால் நாம் அதில் ஒருகணம் லயித்து விடுவது போல என் தந்தையோடு வாழ்வில் பகிர்ந்து கொண்ட அனுபவங்களும், துன்பங்களும், துயரங்களும், ஆங்காங்கே பாலைவனச் சோலையைப் போல், சிறுசிறு மகிழ்ச்சியும் எழுத்து வடிவாக உயிர் பெறும் போது, ஒருகணம் நீங்களும் நின்று கேட்பீர்கள் ! ஆனால், பகிர்ந்து கொள்ள நினைப்பதைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சாதுரியமற்ற பெண் நான் !

மரணம் என்னவோ நம்முன் மீண்டும் வருவேன் எனக் கள்ளச் சிரிப்போடு கண் சிமிட்டிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், இதயத்தில் எழுந்து தாக்கிக் காயப்படுத்திய - படுத்திக் கொண்டிருக்கிற, இன்னும் காயப் படுத்துமோ என அச்சப் படுகின்ற இதைப் பற்றிப் பேசித்தான் ஆக வேண்டும்.

வேகமாகச் சுழுலும் இன்றைய உலகில் மரபுக் கவிதையா? அதை யார் பார்க்கிறார்கள்? யார் படிக்கிறார்கள்? யாருக்கு நேரமிருக்கிறது? எனப் பரவலாகப் பேசப்படும் உண்மை, சுடுகின்றது. மனம் நொறுங்கி ரணப்பட்டுப் போகிறது. நல்லவை தெளிவான ஒரு பாதையைச் சொல்லும் சிறந்த நூல் கூட அது மரபுக் கவிதை என்றால் மறுத்துவிடக் கூடுமோ?

கடல் அழிவில் துன்புற்ற மக்களுக்காக, உலகம் முழுவதும் உதவிக் கரம் நீட்டுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் கடந்த காலத்திலும் சளி, இக்காலத்திலும் சளி, நல்ல பல கவிஞர்களும்,

34