பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெற்றாக வேண்டும். இந்தப் பாமரப் பெண் சிறுமி இல்லை. அனுபவத்தின் மொத்த உருவம் மரணத்தை அழைக்கும் வயதில் மலர்ந்த இதயம் ! அது உங்களை வாழ்த்துகிறது. நாமும் நம் இனத்தை அழித்துக் கொண்டிருக்கும் அனைத்தையும் நம் எழுத்தின் மூலமாக, அந்த நிகரில்லா ஆயுதத்தின் மூலமாக அழிக்க முயல்வோம். நம் எழுத்துகள் உண்மையை நோக்கிச் செல்லட்டும் !

நன்மையும் தீமையும் கலந்தவனே மனிதன் என்றபோதிலும், நம் பேனா முனையின் ஆழம் அவன் இதயத்தைச் சென்றுசேரட்டும். நம் தொன்மையான தமிழகப் பெருமையும் புகழும் அவன் செவியை அறைந்துதாக்கட்டும். மனிதநேயம் அவன் கண்களில் சுடர்ஒளியை பரப்பட்டும். உழைப்பை ஊக்கத்தோடு அவன் கரங்கள் தொடரட்டும். கால்கள் உறுதியோடு தன் காலச் சுவடுகளைப் பதிக்கட்டும்.

மரணம் எடுத்துச்செல்லும் வரை ஒரு சிறு உதவியைக் கூட யாரிடமும் என் தந்தை பெற்றுக் கொள்ளவில்லை. மரணத்திற்கு முந்தைய நாள், மாடி அறையில் அவர் கீழே விழுந்த சப்தம் கேட்டு நாங்கள் ஓடினோம். முதுகை நிமிர்த்தி அமர வைத்த அந்த உதவி கூட அவருக்கு ஏற்புடையதாக இல்லை. அவராகவே கால்களை மடக்கினார். பேப்பர் கொண்டு வா என்று ஜாடை காட்டினார். உட்கார்ந்தவாறே பேப்பரைப் படித்தார். மூச்சை இழுத்து உள் வாங்கினார். மிகமிக மெதுவாக யாரையும் அனுமதிக்காமல் எழுந்தார். ஜாக்கிரதையாக நடந்து கட்டிலுக்குச் சென்று படுத்தார். மறுநாள் நிரந்தரமாக உறங்கி விட்டார்!

'சாவிலிருந்து என்னைச் சாகாமைக்கு அழைத்துச் செல் : இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்; நரகத்திலிருந்து என்னைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்.’

அசத்திலிருந்து சத்துக்குச் செல்லவேண்டினும்,இருளிலிருந்து ஒளிக்கு செல்ல வேண்டினும், நம்மைப் பிறர் யாரும் அழைத்துச் செல்ல முடியாது. தட்டுத் தடுமாறிக் கொண்டேனும் அவற்றை நாடி நாமேதான் செல்ல வேண்டி உள்ளது.

62