பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவரோடு இருந்த நாட்கள் மலரும் நினைவுகளா? இல்லை மரணத்தின் நிழல்களா, என யோசிக்கிறேன். முகவுரை எழுத முனைந்த நான் முடிவுரை எழுத மறந்தேன். காலம் என்னுள் ஏற்படுத்திய காயங்களைப் பசுமையாக வைத்துக் கொள்ளவே நான் விரும்புகிறேன். அது என் வாழ்வின் உன்னதமான பரிசு !

மக்கள் 'சுகம்' என நினைக்கும் வாழ்க்கையை இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கும் நான். மீண்டும் பிறப்பதாயிருந்தால், இயற்கையிடத்தும், பஞ்ச பூதங்களிடத்தும், "இன்றுபோல் என்னை பலவீனமான பெண்ணாகப் படைக்காதே! என்தந்தையைப் போன்று எதையும் தாங்கும் எஃகு இதயத்தோடு படைத்துவிடு " என்றே வேண்டுவேன்.

ஆம்! அந்த வலி மிகுந்த வலிய நோயால், இவரை ஒரு சிறு முக்கலோ, முனங்கலோ, 'ஆ அம்மா' என்ற ஆறுதலுக்கான புலம்பலோ, ஒரேஒரு முறை ஆம் ஒரேயொரு முறை கூடக் கூறவைக்க அந்த வலிய நோயால் முடியவில்லையென்றால், அந்நோய் அவரிடம் தோற்றுப்போய் விட்டது என்றுதானே பொருள்? நான் அதை வெற்றி கொள்வேன் என்ற அந்தக் கவிஞனின் கூற்றும் மெய்தானே !

சில நாட்களுக்கு முன்பும் ஒரு முறை கீழே விழுந்திருக்க வேண்டும். நெற்றியில் பலமான காயம். இரத்தம் உறைந்து போய் இருந்தது. "இது என்னப்பா காயம் ! எப்படி ஆயிற்று? " என பதறிப் போய்க் கேட்டேன். அவர் பதில் சொல்லவே இல்லை. கீழே விழுந்து விட்டேன் என்று சொல்வதுகூடத் தன் ஆண்மைக்கும், உறுதிக்கும், துணிவிற்கும் இழுக்கு என அவர் நினைத்திருக்க வேண்டும்.

மரணத்தின் கடைசி நாட்களில் அவர் சொன்னார், “கவிஞன் என்பவன் மரணத்தையும், வாழ்க்கையையும் ஒன்றாய்ப் பார்ப்பவன். காலத்தையும் வென்று நிற்பவன். நீ ஒரு கவிஞனின் பெண் என்பதை மறந்து, பாமரப் பெண் போல் கண்ணிர் விட்டு அதைக் களங்கப் படுத்திவிடாதே" என்று. ஆனால் நான் அழாமல் இருக்கத்தான் முயன்றேன். பெரும் இழப்பு என்னும் அக்னிக்-

63