பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏறக்குறைய 1942-லிருந்து 1950 வரையிலான அவரின் கவிதைகள், தியாகி, தமிழன்.இந்துஸ்தான். வினோதன்,சுதர்மம், தமிழுலகம், பிரசண்ட விகடன், மதுரமித்ரன், சேரநாடு, நவ இந்தியா போன்றபத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன. அதன் பின், பத்திற்கும் மேற்பட்ட காவியங்களை எழுதினார். அதுவுமின்றி, கன்னட மொழியின் தமிழாக்கமாக குறுநாவல்கள் சில, நீதிக் கதைகள் பல. பழமொழிகள் ஆயிரத்துக்கும் மேல் என்று மொழி பெயர்த்து எழுதினார். 1904 ல் பிறந்த அவர் எண்பத்தியேழு ஆண்டுகள் எழுதிக் கொண்டே இருந்தார். 1991ல் அவரது கனவுகளும் நிறைவேறாமல் நனவுகளும் நிறைவேறாமல் காலமாகி விட்டார். காலமானார் - என்ற சொற்கள் அடி வயிற்றைச் சுண்டத் துடித்த வார்த்தைகள் .....

நல்ல எழுத்தாளனுக்கு எட்டுத் திக்கும் சோதனைச் சாவடிகள்தான். அவன் எழுத்து நசுக்கப்படும் போது அவன் இதய தாகத்தின் தவிப்பை எடுத்துச் சொல்ல வழியுண்டா? அவன் எப்படித்தான் மீள்வது? அவன் சுதந்திரம் எங்கே? சுதந்திரக் காற்று எங்கே? எதைச் சுவாசிப்பது? எப்படிச் சுதந்திர கீதத்தை இசைப்பது...?

இதையெல்லாம் தீர்க்க, முப்பத்து முக்கோடி தேவர்கள்தான் வரவேண்டும். வருவார்களா? இல்லை, ஒருகணம் என்ற அவர்களின் ஒரு லட்சம் ஆண்டுகள் கழித்தா?.

'தர்மம் என்றோ செத்து விட்டது. செத்த தோலைத் தைத்து பூஜித்துக் கொண்டிருக்கிறோம்' . என்பது உண்மைதானே?

சமீபத்தில் படித்த வரிகள்: வாசகர்களின் அலமாரிகளில் புத்ததகங்கள் மூடிய படியே இருக்கின்றன. அப்படியே புத்தகங்கள் திறக்கப்பட்டாலும் இதயங்கள் மூடிக் கொள்கின்றன.' என்பது.

என் குழந்தைகளே! கொஞ்சம் இதயத்தைத் திறந்துவிடுங்கள்! பாவப்பட்ட ஆத்மாவான நான் வேண்டுகிறேன். நல்லவையெல்லாம் அதற்குள் புக வழி விடுங்கள் என்று புலம்பும் பாமரப் பெண்ணான என்னை மன்னியுங்கள். என் நீண்ட முகவுரையையும் கூட.

வணக்கமும், வாழ்த்துக்களும்,

65