பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


மனம் போல வாழ்வு


மனம் போல வாழ்வென்று சொல்லடா - இதை
மந்திர மாயெண்ணி செல்லடா
வனம்போலப் பயங்கரச் சூழலில் - நல்ல
வழிகண்டே னென்று நீ சொல்லடா

அயர்வும் மயக்கமும் நீக்கடா - நெஞ்சில்
ஆண்மை யறிவினைத் தேக்கடா
உயர்வே உயிரென ஊக்கடா - உன்னை
உண்மை மனிதனா யாக்கடா

நினைப்பதனைத்துமே நேர்மையாய்த் - தினம்
நினைத்து நினைத்துப் பழகடா
மனப்பான்மை உயருமளவிலே - இங்கு
மாந்தர் உயர்வென் றொழுகடா

தேடக் கிடையாத சொத்தடா - நமைத்
தேவர்க ளாக்கிடும் சித்தடா
நாடும் புலமையின் சத்தடா - பெரும்
நன்மை விளைக்கின்ற வித்தடா

எண்ணியெண்ணித் தினம் தேரடா - இதை
ஏணியாய்க் கொண்டுமே லேறடா
மண்ணிற் பிறந்த மனிதரில் - நீயோர்
மாணிக்க மாவதைக் காணடா

எண்ணடா, எண்ணடா, எண்ணடா - என்றும்
ஏற்றத்தையே நெஞ்சி லெண்ணடா
கண்ணுங் கருத்துமா யெண்ணடா - எண்ணில்
கடைத்தேற லாமிந்த மண்ணிலே.

74