பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

கூட்டியெறியடா கூட்டியெறி - கூடும்
குப்பைகூ ளங்களைக் கூட்டியெறி !
காட்டும் நியதி கடைப்பிடிக் காமலே
கல்லும் கழிவும் கலந்துவிட்டுக்
கூட்டி விலைகளைக் கூறியே விற்கும்
கொடியவர் குப்பையைக் கூட்டியெறி !
கூட்டியெறிந்திடக் கூசிடின் நாடொரு
குப்பைமே பாய்விடும் கூட்டியெறி !

கூட்டியெறியடா கூட்டியெறி-கூடும்
குப்பைகூ ளங்களைக் கூட்டியெறி !
தோட்டந் தொடியில் தொழும்பர்க ளாகித்
தொழில்புரி வோர்களைத் தொட்டுவிடின்
தீட்டெனச் செப்பிதீண் டாமைதிணிக்கிற
தேறலர் குப்பையைக் கூட்டியெறி !
கூட்டியெறிந்திடக் கூசிடின் நாடொரு
குப்பைமே டாய்விடும் கூட்டியெறி !

கூட்டியெறியடா கூட்டியெறி-கூடும்
குப்பை கூளங்களைக் கூட்டியெறி !
நீட்டி முழக்கி யளந்திட என்றுமே
நேர மெனக்கில்லை கூட்டியெறி !
வாட்டும் பசிக்கொரு காரண மாகவே
வந்த தனைத்தையும் கூட்டியெறி !
கூட்டி யெறிந்திடக் கூசிடின் நாடொரு
குப்பைமே டாய்விடும் கூட்டியெறி !

76