பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


நிலைப்பு

தலைநி மிர்ந்து நிற்பேன் - மொழியால்
தமிழனென்று ரைப்பேன் !
மலைநி மிர்ந்த தென்று - மக்கள்
மகிழ்ந்து பேசு மாறே !

முடியின் மேல்மு கிழ்த்த - மதியும்
முகம்ம லர்ந்த தெனவே
படியின் மேல்மு கிழ்த்த- மதியாய்ப்
பண்பு மேவ வைப்பேன் !

உள்ளு கின்ற வுடனே - உள்ளத்
துவகை யூறுங் கவிதை
புள்ளி மான்களென்னப் - புறத்தில்
பொலியு மாறு செய்வேன் !

இனிமையான சுனையாய் - எனது
இதய மூற்றெ டுத்து
மனிதர் மாந்து மாறே - மாண்பை
மகிழ்ந்து கொள்ள வைப்பேன் !

மணங்க மழ்ந்த மலரைக் - காற்று
மருவிக் கொள்வ தொப்பக்
குணங்க லந்த கூற்றைக் - கூட்டிக்
கொள்ளு மாறு செய்வேன் !

முகில்கள் கூடி மொய்த்து - மழையாய்
முழங்கிப் பெய்தல் போல
அகிலம் கூடி மொய்த்தால்- மொழியாய்
அறிவு பெய்ய வைப்பேன் !

ஒளிமி குந்த கதிரோன்- உதித்தே
உலகை யோம்பு மாறு
களிமி குந்த வாழ்வை - உலகம்
காணச் செய்கு வேனே !

79