பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


காலம்

நீல வானம் சிவக்கவே-பருதி
நேர் கிழக்கினி லே
காலை யாகி யுதித்தது-உலகம்
கவின் மிகுந்தி டவே !

காலம் மிகமிக அரியது-வீணாய்க்
கழித்தல் கூடாது ;
சாலவும்பயன் படுவதென்-றறிஞர்
சாற்று வதனாலே,

மண்ணில் மனிதரென்றுள்ளவர்-மலர்போல்
மணங் கமழ்ந்திட வே
எண்ண வுள்ள தனைத்தையும்-பலகால்
எண்ணி முடித்தேன் நான் !

நேசர் பகைவரென் றின்றியே-நெஞ்சில்
நேர்மை யுள்ளவனாய்ப்
பேச வுள்ள தனைத்தையும்-ஆய்ந்து
பேசி முடித்தேன் நான் !

வேட்கை மிக்கவ னாகவே-சான்றோர்
விரும்பி விளக்கினதில்
கேட்க வுள்ள தனைத்தையும்-கூர்ந்து
கேட்டு முடித்தேன் நான் !

வெய்யில் மழையென வீட்டிலே-வீணாய்
வீற்றி ருக்கா மல்,
செய்ய வுள்ள தனைத்தையும்-திருந்தச்
செய்து முடித்தேன் நான் !

மாலை யாகிய காலமே-இன்று
மகிழ்ந்து நீ சென்று
வேலை செய்திடக் காலையாய்-நாளை
விடிய மறவாதே !

80