பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


நாடு

நான்பிறந்ததமிழ் நாடு போன்றவொரு
நல்ல நாடுலகி லில்லையே!
தேன்பிறந்ததமிழ் போன்றி னிக்குமொரு
தெளிவு தந்தமொழி யில்லையே !

மருதம் முல்லையெழில் குறிஞ்சி நெய்தலிவை
மாறும் பாலைநில மைந்துமே
கருதும் பொதிகைகொடைக் கான லானைமலை
காக்கும் நீலகிரி சொந்தமே !

பொன்னி வைகையரும்பெண்ணை பொருநையெனப்
புனித நதிகளிவை போதுமே
சென்னை தஞ்சையொடு திருச்சி மதுரைபெருஞ்
செல்வக் கோவைநகர் மீதமே !

நான்குநூறு புறம்நான்கு நூறுஅகம்
நனியு நல்லதிருக் குறளொடும்
வான்கண் மீன்களென வைகி யொளிருகிற
வகையில் சங்கத்தமிழ் நூல்களே !

இதய மென்ற நிலத் திசைவி ளங்கிடவும்
இனிய கலையெழிலைத் தேக்குவோம் !
புதிய மதிவிளைவும் புதிய விதிவிளைவும்
புதிய நிதிவிளைவு மாக்குவோம் !

புனித மானபொழில் பூக்கள் பூத்துலகில்
புகழ்படைத்திடுதல் போலவே
மனிதர் மாட்சியெனு மகிழ்ச்சி பூத்துலகில்
மணக்கும் வாழ்வுதனைக் கோலவே,

உலர்ந்து திர்ந்தசரு கொப்ப வுயிருடலை
யுதிர விட்டுவிட் டோடினும்
மலர்ந்த நெஞ்சில்படு மண்ணும் மக்கிமலர்
மணங்க மழ்ந்திடுதல் கூடுமே !

81