பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


உணவு

உணவுண் டாக்கிட வேண்டும் நம்முடல்
ஊறில் லாதிருந் துண்ணவே !
துணிவுண் டாக்கிடவேண்டும் தோன்றிடும்
தொல்லை யறத்தொழில் பண்ணவே !

குஞ்சு வளர்ந்திட வேண்டி ஒருசிறு
குருவி பற்பல ஊர்கள்போம் !
பிஞ்சு வளர்ந்திட வேண்டிப் பெருநிலம்
பிளக்க மரம்செடி வேர்கள்போம்

இன்ப மெய்திட எண்ணின் முன்புழைத்
திருக்க வேண்டுமென் போமினித்
தென்பு டன்வயல் தோட்டம் காடெனத்
தேர்ந்து சென்றிடுவோம்நனி !

நெற்றி நீரெழில் நித்தி லம்மென
நீணி லந்தனில் சிந்தவே,
உற்ற முறைகளி லுதவி யொத்துழைத்
துழுது பயிரிடமுந்துவோம் !

'பசியி னாலொரு மனிதன் துஞ்சினன்
பாரி' லெனும்மொழி தோன்றிடின்
வசியி னாலிடி பட்டதென்ன
வருந்து மறிவுள மூன்றிடின் !

உடலி லேவலுவுள்ள மனிதர்கள்
ஓய்ந் திருந்திடு வாரெனில்,
‘கடமை தவறிவிட் டீரெ' னில்சொல்லக்
காரணம்இல்லை பாரினில்!

செய்யும் வேலைகள் சரிவரத் தினம்
செய்து கொண்டிருப் போமெனில்
உய்யும் முறையது வாய மைந்திடும்
உலக மெங்குமுள்ளோர்களே !

83