பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


சீட்டுக் கையுடன் பகலைக் காசொடு
சேர்த்தி ழந்திடச் செய்கிறான் ; - மதுப்
பாட்டில் கையுடன் இரவை மாசொடு
பாழ டித்தெமை வைகிறான்.

மூத்த வன்முகம் பார்த்த வன்செயல்
முறையைக் கண்டெமை யீன்றவள் - நூல்
கோத்த முத்தறுந் தென்னக் கண்ணில்நீர்
கொட்டி முதுமையைக் கூட்டினாள்.

பருவ மெய்திய தங்கை பதைத்தொரு
பதரு டன்பிறந்தே னெனத்-தன
துருவம் பையவே குன்றி நொந்துளம்
உருகி யுலர்ந்துகொண் டுள்ளனள்.

ஒத்த வுடன்பிறப் பெனினு முள்ளஎம்
முடைமை முற்றும் தொலைத்தவன் - தலை
கொத்தி யெறிந்திட வேண்டு மென்றுளம்
கொதித்தெ ழும்புதென் கோபமும் !

ஊரை நரகென மாற்றி யமைக்கிற
உடைமை யாளனு மொருவன்வந் - தட
பாரில் தமயன்சொல் படிந டப்பது
பாரதப்பண் பென்கிறான்.

விரச மானசச் சரவி தென்று
வெறுப்பு வேதனை யோடுநான் - ஒரு
அரச மரத்தடிப் பிள்ளை யாரென
அமர நேர்ந்தது வீட்டிலே

காடு போச்சுது, சுழனி போச்சுது
காசு கண்ணியம் போச்சுது - இந்த
வீடு மாத்திரம் மிச்ச மாச்சுது
விரும்பி இருளர சோச்சவே !

89