பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்பான்

ஆனை போன்ற அரும்பெரும் மக்களை
ஆட்சி யென்கிற அங்குசம் மாட்டியே
பூனை போன்றவ ராக்கி யொடுக்கினர்
புவியி லுள்ள தொழில்கள் புரியவே !

அஞ்சித் தாழ்ந்தவ ராண்டுபல் லாயிரம்
ஆயுள் தீரவுழைத்து மடிந்தனர்
கஞ்சி கந்தல் குடித்த துடுத்தது
கண்ட தன்றிவே றொன்றுங் காணாமலே

'நீதி யன்றிது' வென்று பகர்திடின்
நெறியை மீறிய தோர்பெருங் குற்றமாம் !
வேத பாரகர் தீதுகள் செய்யினும்
வெறுத்து நீங்கி விடுவதும் பாவமாம் !

சேவ கன்னனு மானெனச் சிந்தையில்
சிறிதும் மாசு மறுவுமில் லாமலே
ஏவும் வேலையைச் செய்து முடிப்பதும்
ஈந்த கூலிகை யேந்தலும் புண்யமாம் !

கஞ்சி யின்றிக் களைத்துயிர் போயினும்
காலன் மேல்பழி போடவும் வேண்டுமாம் !
டஞ்சை யாயினும் பக்தி பசனைகள்
பண்ண வேண்டுமாம் பாரத நாட்டிலே !

பொய்பு ரட்டுப்பொறாமை யகத்திலே
புன்சி ரிப்பும் பொலிவும் முகத்திலே
வைய கத்தைக் காக்கிப் பிழிந்துதம்
வாழ்வை வஞ்சகர் வைப்பர் சுகத்திலே !

இனைய கழ்ச்சிக ளாலறி யாமையோ
டேழ்மை யெங்கு மிணைத்தன ரென்பதும்
தினையி னளவும் புனைவென லின்றியே
தெரிய வைத்ததென் சிந்தை விளக்கமே !

91