பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாஸ்கரத் தொண்டைமானைப் பற்றி தொண்டைமான் நம்முடைய கையைப் பிடித்துக் கொண்டு கோயிலின் கோபுர வாசலுக்கு அழைத்துக் கொண்டு போகிருர், இது பெரிய காரியமில்லை. நமது உள்ளத்தைக் கோயிலின் அடித்தலமாக, அதன் பொருளாக, அதன் சோபையாக விளங்கும் சத்திய உலகத்தின் வாசலுக்கே, அதன் கருவறைக்கே அழைத்துப் போக முயல்கிறார். அங்கே புராணமும் வரலாறும், சமயமும், கலையும், இலக்கியமும் ஒன்றாகக் கலந்து ஒரு ஞானக் காட்சியை அமைக்கின்றன. அதைத் தொண்டைமான் நமக்குக் காட்டுகிறார். இந்தக் காட்சியை அனுபவமாக மாற்றும் சித்து விளையாட்டும் தொண்டைமான் உதவியால் நமக்குக் கிடைக்கிறது. அப்போதுதான் நமது ஊமை உள்ளமும் பேசத் தலைப்படுகிறது. நண்பர் தொண்டைமான் கையில் சமயம் பெறும் சித்தாந்தமாக இல்லாமல் சுவை பொருந்திய அனுபவம் ஆகிறது. தலைவலியைத் தவருது தரக்கூடிய தத்துவ விசாரமும் வரலாற்று ஆராய்ச்சியும் தெளிந்து எளிமையிலும் எளிமையாகித் தேனாக ஒடுகின்றன. கல்வெட்டுக்கூட கதையாகிறது. இலக்கியம் மணங்கமழும் மெல்லிய பூங்காற்றாக நம் இதயத்தை வருடுகிறது. பேராசிரியர் அ. சீநிவாசராகவன் 14–1–61.