பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


முகவுரை

ஒரு கூனன், ஒரு குருடன், ஒரு முடவன், ஓர் ஊமை ஆக நான்குபேர் வடவேங்கடமலை ஏறிய கதையை நண்பர் பாஸ்கரத் தொண்டைமான் சொல்லக் கேட்டிருப்பீர்கள். நான்கு பேரில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறை, உடற் குறைதான்; ஆனால் வேங்கடவன் அருள் கிட்டியதும் உடற் குறைகள் நீங்கியது இதுவே கதை.

உடற்குறைகளைப் போக்க, உள்ளத்தில் இருந்த பக்தி உதவியது. ஆனால் உள்ளமே கூனாக, குருடாக, முடமாக, ஊமையாக இருந்து விட்டாலோ? அப்படித்தான் நம்மில் பலருக்கு இருக்கிறது. மற்றவர்களைச் சொல்வானேன்? எனக்கு அப்படி இருக்கிறது.

உடலில் குறையில்லை. கண்ணபுரத்திற்கோ, கடவூருக்கோ, தேரழுந்தூருக்கோ, திருப்புன்கூருக்கோ என்னால் போகமுடியும், போயும் இருக்கிறேன். போய் என்ன செய்ய? கோயில் வாசலில் நின்றால் போதுமா? கோயில் என்ற அற்புதம் விளக்குகின்ற உண்மை-உலகத்திற்கு, அந்த வான் முகட்டுக்கு என்னால் ஏறிவிட முடியுமா? முடியாது. ஏன் தெரியுமா? தினசரி வாழ்க்கைச் சிறுமைகளில் சிக்கி என் உள்ளம் கூனிக் குறுகிவிட்டது. அதுவே காரணம். கோபுரங்களையும், மண்டபங்களையும், சிலைகளையும், கல்வெட்டுக்களையும் நானுந்தான் பார்க்கிறேன். பார்த்து? அவற்றின் பொருளைக் காண வேண்டாமா? அதற்கு, வரலாறும், இலக்கியமும், சமயமும், தத்துவமும், எல்லாவற்றிற்கும் மேலாக அழகுணர்ச்சியும் நிறைந்த கலைக்கண் வேண்டியிருக்கிறது. அது இல்லாத உள்ளம் குருடுதானே! இது போலவே, காண்பதை எட்டிப் பிடித்துத் தன்னுடையதாக, அநுபூதியாக மாற்றிக் கொள்ள இயலாத உள்ளம் முடந்தானே! இப்படித்