பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

109

ஆதி வைத்திய நாதர்

அவரை வலம் வரலாம். அப்படி வரும்போது 'இந்தத் தலத்துக்கு வைத்தீசுவரன் கோயில் என்ற பெயர் மிகவும் பொருத்தமாக இருக்க, இதை ஏன் புள்ளிருக்கு வேளூர் என்று அழைக்கிறார்கள் என்று உடன் வரும் நண்பர் கேட்பார். அவருக்கு விடை சொல்லும் இந்தப் பிராகாரம். ஜடாயு என்னும் புள் (பறவை), ரிக்குவேதம், முருகனாம் வேள், சூரியனாம் ஊர், நால்வரும் பூஜித்த தலம் ஆனதால் இந்த பெயர் வந்தது என்று தல வரலாறு கூறும். இதற்கேற்ப இங்குள்ள தெற்குப் பிராகாரத்தில் சடாயு குண்டம் இருக்கிறது. ராமாயணத்தில் வரும் சடாயு இராவணனோடு போர் ஏற்று விழுந்து மாண்ட இடம் என்றும், அந்த சடாயுவைப் பின்னர் ராம லக்ஷ்மணர்கள் தகனம் செய்த இடமே இது என்றும் அறிவோம். அங்குள்ள ஒரு குண்டத்தில் சடாயுவின் சாம்பல் இன்றும் இருப்பதைக் காணலாம். சடாயுவும் சம்பாதியும் முத்தி பெற்ற இந்தப் புள்ளிருக்கு வேளூரை ஞானசம்பந்தர் பாடுகின்ற போது இரண்டு பறவை அரசினையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டே பாடியிருக்கிறார்.