பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

111

இவரையே அருணகிரியார், குமரகுரபரர் எல்லாம் பாடிப் பரவி யிருக்கிறார்கள். குமரகுருபர் பாடிய முத்துக் குமரன் பிள்ளைத் தமிழ் மிகச் சிறப்பு வாய்ந்தது.

கூன் ஏறு மதிநுதல் தெய்வக்
குறப்பெண் குறிப்பறிந்து
அருகு அணைந்து,
குற்றேவல் செய்ய, கடைக்கண்
பிணிக்கு எனக் குறை இரந்து
அவள் தொண்டைவாய்
தேனூறு கிளவிக்கு வாயூறி
நின்றவன் செங்கீரை
ஆடி அருளே

என்று பாடும் பிள்ளைத் தமிழில், தமிழ் கொஞ்சி விளையாடுகிறது.

கோயில் நிரம்பப் பெரிய கோயில் ஆனதால் சுற்றிச் சுற்றி வரலாம். அங்கு கோயில் கொண்டிருக்கும் மூர்த்திகளை யெல்லாம் கண்டு கண்டு தொழலாம். இக்கோயிலில் எட்டு கல் வெட்டுக்கள் இருக்கின்றன. அவை கூட முழுவதும் சிதையாமல் இல்லை . திருப் பணி செய்தபோது சிதைந்திருக்கலாம். இக்கல் வெட்டுக்களில் சிறப்பானது கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழ நாட்டை ஆண்ட விக்கிரம சோழன் காலத்தியது; இவன் முதற்குலோத்துங்கன் மகன், இவன்றன் மெய்க்கீர்த்தியை ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.

திருவடி இரண்டும் தன் முடியாகத்
தென்னவர்சூட, முன்னும் மனுவாறு பெருக,
கலியாறு வறப்ப, செங்கோல் திசை
தொறும் செல்ல, வெண்குடை நிலவளாகம்
எங்கணும் தங்க, வெண்ணிலாத் திகழ,
ஒருதனி மேருவில் புவியின் பொன்னேமி யாவும்