பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

வேங்கடம் முதல் குமரி வரை

பிறக்கிறான். ஓர் அந்தணரிடம் பண்ணையாளாக வேலை பார்க்கிறான். அவனுக்கு எப்படியோ ஒர் ஆசை பிறந்து விடுகிறது தில்லையில் நடம் ஆடும் கூத்தனைக் கண்டு தரிசிக்க வேண்டும் என்று. அதற்குத் தன் சேரியில் ஆள் திரட்டுகிறான். சேரியிலுள்ளவர்களைத் தில்லைவாழ் அந்தணர்கள் கோயிலுள் விடமாட்டார்களே என்று அவர்கள் எண்ணுகிறார்கள். 'இது எல்லாம் நமது ஜாதிக்கு அடுக்காத காரியம்' என்று நாட்டாண்மைக் கிழவன் வேறே தடுக்கிறான். இருந்தாலும் ஒரு சிலரைக் கூட்டிக்கொண்டு பக்கத்திலிருக்கும் திருப்புன்கூரில் உள்ள சிவலோக நாதனைத் தரிசிக்கப் புறப்பட்டு வருகிறான்.

சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்!
பாவமயங்களைப்போக்கி-அவர் பரமபதத்தைக்கொடுப்பார் அந்த
சிவலோகநாதனைக் கண்டு
சேவித்திடுவோம் வாரீர்!

என்று பாடிக்கொண்டே வந்துவிட்டான் திருப்புன்கூர் தேரடிக்கு. அதன் பின்தான், சிவலோக நாதனைக் கண்டு தரிசிப்பது எளிதல்ல என்று தெரிகிறது. முதலில் சந்நிதித் தெருவிலே நுழையவே அனுமதி கிடையாது. அதன் பின் கோயில் வாயிலில் பெரிய நந்தி வேறே படுத்துக் கிடக்கிறது. எப்படி எட்டி நின்று தரிசிப்பது? அவனது ஏக்கம் எல்லாம் தேரடியில் நின்று தரிசித்தாலும் போதும் என்பதுதான். 'உற்றுப் பார்க்கச் சற்றே இந்த நந்தி விலகாதா' என்று எண்ணியிருக்கிறான். அவ்வளவுதான், சிவலோக நாதன் தன் நந்தியைப் பார்த்து, சற்றே விலகியிரும் பிள்ளாய், நம் சந்நிதானம் மறைக்குதாம் என்று வேண்டிக் கொள்கிறான். நந்தியும் அப்படியே விலகிக் கொள்கிறது. நந்தன் குதுகலித்து ஆடிப்பாடுகிறான். இப்படி நந்தி விலக அருள் செய்கான் சிவலோகநாதன் என்பதைச் சேக்கிழார்,