பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

வேங்கடம் முதல் குமரி வரை

சாத்துதல் என்றால், ஏட்டை அவிழ்த்து இறைவனை நினைத்து ஏட்டின் கயிற்றை ஏதாவது ஒரு பக்கம் வரும்படி இழுப்பது. அப்படி இழுத்த பக்கத்தில் இருக்கிற பாடலைப் படிப்பது. அதில் எதை வேண்டி நின்றோமோ, அதற்கு ஊன்றுகோலாக ஒரு கருத்து நிற்கும். அப்படிக் கயிறு சாத்திப் பார்த்ததில் அன்று வந்த பாட்டுத்தான் 'பேயடையா பிரிவு எய்தும்' என்ற ஞானசம்பந்தரது தேவாரம், அந்தத் திருப்பாட்டிலே 'பிள்ளையினோடு உள்ள நினைவு ஆயினவே வரம் பெறுவர், ஐயுற வேண்டா ஒன்றும்' என்றிருக்கவே அச்சுத களப்பாளர் மிகுந்த மகிழ்ச்சியோடு, திருவெண்காட்டுக்கு வருகிறார் தம் மனைவியுடன். அங்குள்ள சுவேதவன ஈசுவரரது கோயிலில் நுழைகிறார். அங்குள்ள சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம் எல்லாவற்றிலும் முழுகி எழுகிறார். வெண்காடரையும் பிரம்ம வித்யா நாயகியையும் வழிபடுகிறார்.

சில நாட்கள் சென்றதும் ஒருநாள் இரவில், இறைவன் அச்சுத களப்பாளரின் கனவில் தோன்றி, 'இப் பிறவியில் மகப்பேறு எய்தும் பாக்கியம் உனக்கில்லையே' என்கிறார். அச்சுதகளப்பாளரும் ‘பரவாயில்லை , புத்திரப் பேறு அரசர்களுக்குத்தான் மிகமிக அவசியம். என் போன்றாருக்கு அவ்வளவு முக்கியமில்லை தான். என்றாலும், பெரிய நாயகியின் திருமுலைப்பாலுண்டு அருள்ஞானம் பெற்ற ஆளுடைய பிள்ளையின் திருவாக்கு அடியேன் வினை காரணமாகப் பொய்த்துப் போகிறதே என்றுதான் வருந்துகிறேன்' என்கிறார். அவ்வளவுதான்; சுவேதவன ஈசுவரருக்கு ரோசம் வந்து விடுகிறது. அச்சுத களப்பாளரது பழவினைகளைக்களைகிறார். அவர் மனைவி கருவுற்று நல்லதொரு ஆண்மகனைப் பெற்றெடுக்கிறாள். மெய்கண்டார் என்னும் தீக்ஷாநாமம் பெற்று சைவ சித்தாந்தத்தின் தலையாய நூலான சிவஞான போதத்தையே இயற்றுகிறார்.