பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

வேங்கடம் முதல் குமரி வரை

மிரண்டே அகோர சிவனாக இருக்கிறார். அந்த அகோர சிவன் உருவான வரலாறு இதுதான். மருத்துவன் என்று ஓர் அசுரன் இறைவனை நோக்கித் தவம் பண்ணி, வர பலமும் வலியுடைய சூலாயுதத்தையுமே பெற்றவன். அவன் வழக்கம்போல் தேவர்களுக்கு இடுக்கண் செய்கிறான், தேவர்களோ பயந்து தேவர் உலகை விட்டே ஓடி வந்து இத்தலத்தில் வேற்றுருவத்தில் நின்று தவஞ்செய்கிறார்கள். அங்கேயும் வந்து துன்புறுத்த முனைந்து விடுகிறான் மருத்துவன். சிவபெருமானோ முதலில் சாந்தமாக மருத்துவனைத் துரத்தி விரட்ட ரிஷபதேவரையே அனுப்புகிறார். ஆனால் அவனோ சிவபிரானிடம் பெற்ற 'சூலாயுதத்தினால் ரிஷபதேவரது கொம்புகளை முறித்து, காதுகளை அறுத்துத் துரத்தி விடுகிறான். அவரும் வந்து முறையிட பிறக்கிறது கோபம் சிவனுக்கு. அந்தக் கோபமே அகோர சிவனாக உரு எடுக்கிறது. மருத்துவன் பேரில் பாய்கிறது; அவனை சம்ஹரிக்கிறது. அப்படி உருவான அகோர சிவமே கோயிலுக்குள் மேலப் பிராகாரத்தில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறார். நல்ல சிலை உருவில், ஏன், உற்சவ மூர்த்தமாகச் செப்புச் சிலை வடிவிலுங்கூட நிற்கிறார்.

இந்த அகோர சிவனுக்கு இடப்பக்கம் உள்ள தாமிர சபையிலே இருக்கிறார் நடராஜர் சிவகாமியுடன். சிதம்பரத்தில் உள்ளது போலவே ரகசியம், சபை எல்லாம் இங்கும் இருக்கிறது. இது ஆதி சிதம்பரம் அல்லவா? நடராஜ தரிசனம் செய்த பின் வெளிப் பிராகாரத்துக்கே வரலாம். மேல் வாயிலில் உள்ள கூடகோபுரம் மிகவும் அழகானது. நல்ல சுதை வேலைகள் நிரம்ப உடையது. இந்த வெளிப் பிராகாரத்தின் மேற்குக் கோடியிலே அம்மை பிரம்ம வித்தியா நாயகியின் கோயில். இந்த அம்மையை வணங்கி வெளிவரும்போது அம்மை சந்நிதானத்துக்கு வடபக்கம் உள்ள புதனையுமே வணங்கி விடலாம். இதன்பின் நூற்றுக் கால் மண்டபம் வரை நடந்து அங்குள்ள ஆறுமுகப்