பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

133

வளம் தலைமயங்கி நின்றது அந்த நகரத்திலே அன்று என்பது நன்கு அறியக் கிடக்கிறது. காப்பிய நாயக நாயகியான கோவலனும் கண்ணகியும் பிறந்து வளர்ந்து மணம் புரிந்திருக்கிறார்கள் அங்கு.

சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் இந்தக் காவிரிபூம் பட்டினத்தைப் புகார் என்றும், அங்கு இருந்து அரசாண்ட சோழ மன்னனைக் காவிரிநாடன் என்றும் குறித்திருக்கிறார்.

அந்தப் பட்டினத்தில் உள்ளவர்கள் எந்தப் பொருளையும் விரும்பி வேறு இடங்களுக்குச் செல்ல மாட்டார்கள். ஆதலின் அந்த நகரத்தாரே 'புகார்' என்ற பெயருக்கு உரியவர்களாக இருந்திருக்கிறார்கள். (ஐயகோ! பின்னால் அப்பட்டினம் கடல் கொள்ளப்பட்டு அங்குள்ள தன வணிகர்கள் எல்லாம் ராமநாதபுரம் வட்டாரத்தை அல்லவா தேடி வந்து அங்கு புகுந்திருக்கிறார்கள். அவர்கள் தானே இன்று நகரத்தார் என்று அழைக்கப்படுகிறார்கள்.)

நிறைமதியும் மீனும் என
அன்னம் நீள் புன்னை
அரும்பிப் பூத்த
பொறைமலி பூங்கொம்பு ஏற,
வண்டு ஆம்பல் ஊதும்
புகாரே எம் ஊர்.

என்று அந்த நகர மக்கள் பெருமையோடு பாடும் நிலையில் இருந்திருக்கிறது அந்நாளில் அந்தப் பூம்புகார்ப்பட்டினம். அந்தக் காவிரிப்பூம்பட்டினத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

இந்தக் காவிரிப்பூம்பட்டினம் இன்று பொலிவிழந்து கிடக்கிறது. நகரத்தின் பெரும் பகுதி கடல் கொள்ளப்பட்டு விட்டது என்கின்றனர். எஞ்சிய பகுதியும் ஒரே மணற்