பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

வேங்கடம் முதல் குமரி வரை

பரப்பாகவே இருக்கிறது. வெள்ளாமை விளைச்சல் அதிகம் இருப்பதாக தெரியவில்லை. அந்தப் பழைய பட்டினத்துப் புகழை ஏதோ ஓர் அளவுக்காவது இன்று வைத்துக் கொண்டிருப்பது அங்குள்ள பல்லவனீச்சுரர் கோயிலே. கோயிலும் கோயிலைச் சார்ந்த கிராமமும் பல்லவனீச்சுரம் என்றே அழைக்கப்படுகின்றன. இக்கோயிலில் தான் பல்லவனீச்சுரர் சௌந்தர நாயகியுடன் கோயில் கொண்டிருக்கிறார். இப்பல்லவனீச்சுரர் கோயில் சென்று சேர, ரயிலிலிருந்து, சீகாழியில் இறங்க வேணும். அங்கிருந்து தென்கிழக்காகப் பத்து மைல் பஸ்ஸிலோ, வண்டியிலோ போக வேணும். வழியில் இருக்கும் வெண்காட்டில் இறங்கி சுவேதாரண்யேசுரரையும் வணங்கிவிட்டே மேல் நடக்கலாம். பல்லவனீச்சுரர் கோயில் பெரிய கோயில் அல்ல, நல்ல மதில், ராஜகோபுரம் விமானம் எல்லாம் உடைய சிறிய கோயில் தான். இந்த இருபதாம் நூற்றாண்டில்தான் ஒரு பெரிய தனவணிகர், கோயிலுக்குத் திருப்பணி செய்து கோயிலை முழுக்க முழுக்கப் புதுப்பித்திருக்கிறார். 'ஆலயம் புதுக்குக, அந்தணாளர்தம் சாலையும் சதுக்கமும் சமைக்க' என்று அன்று கவிச்சக்கரவர்த்தி கம்பன் பாடினானே. அவன் கட்டளையைத் தலைமேற்கொண்டு, இந்தப் பட்டினத்துறை பல்லவனீச்சுரர் கோயிலைப் புதுப்பித்திருக்கிறார். சமீப காலத்தில் இந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்திருக்கிறது. 1951-ம் வருஷம் இங்கு மிகவும் விமரிசையாகச் சிலப்பதிகார மகாநாடு ஒன்றும் நடந்தது.

பல்லவ அரசனால் கட்டப்பட்ட காரணத்தால் பல்லவனீச்சுரம் என்று பெயர் பெற்றது என்பர். எந்தப் பல்லவ அரசன் என்று தெரியக் கூடவில்லை , கல்வெட்டுக்கள் ஒன்றும் இல்லாத காரணத்தால், இந்தப் பல்லவனீச்சுரத்துக்கு சமய குரவர்களில் சம்பந்தர் ஒருவரே வந்திருக்கிறார். அவர் பாடிய பதிகமும். ஒன்றுதான் என்றாலும் பாடிய பாடல்கள் பதினொன்றும் அழகாக இருக்கின்றன.