பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
136
வேங்கடம் முதல் குமரி வரை
 

வாராது காண் உம் கடை வழிக்கே' என்று எழுதப் பட்டிருக்கிறது. அவ்வளவுதான், ஞானோதயம் உண்டாகி விடுகிறது வெண்காடருக்கு.

சூதுற்ற கொங்கையும் மானார்
கலவியும் சூழ் பொருளும்
போதுற்ற பூசலுக்கு என்செயலாம்?
செய்த புண்ணியத்தால்
தீது அற்ற மன்னவன் சிந்தையில்
நின்று தெளிவதற்கோ
காது அற்ற ஊசியைத் தந்து
விட்டான் என்றன் கைதனிலே

என்று பாடிக்கொண்டே வெளியேறிவிடுகிறார். அன்று முதல் இந்த வெண்காடர் பட்டினத்துப் பிள்ளையார் என்ற பெயரோடு, தமிழகம் முழுவதும் உலவி, அரிய உபதேசங்களைப் பாடல்களாகப் பாடி, கடைசியில் திருஒற்றியூர் சென்று முத்தி பெற்றிருக்கிறார். திருஒற்றியூர் கடற்கரையிலே உள்ள சமாதிக் கோயிலைத்தான் முன்பே பார்த்திருக்கிறோமே. அந்தப் பட்டினத்துப் பிள்ளையையே இந்தப் பல்லவனீச்சுரத்து மக்கள், அவர் பிறந்த ஊர்ப் பெருமையுற, கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து வணங்குகிறார்கள். நாமும் அவரை வணங்கி விட்டுப் பிரதான கோயிலுக்குள் நுழையலாம். கோயில் மகா மண்டபத்தை ஒட்டியே தெற்கு நோக்கியவளாய், சௌந்தர்யநாயகி நிற்கிறாள். அவளையும் வணங்கி அதன்பின் உட்கோயிலுள் சென்றால் அங்கு லிங்கத் திருவுருவில் இருக்கும் பல்லவனீச்சுரரையும் தொழலாம். இந்த அன்னையையும் அத்தனையையும் பற்றிச் சிறப்பாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லைதான். என்றாலும் இக்கோயிலில் உள்ள செப்புச் சிலைகளைப் பற்றி கூறாமல் இருத்தலும் இயலாது. இங்குள்ள சோமாஸ்கந்தர்,