பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
139
 

வந்திருக்கிறது. வந்ததோ வந்தோம், நாமும் சாயாவனம் என்று இன்று வழங்கும் சாய்க்காடு சென்று அங்குள்ள சாயாவனசுவரரையும் குயிலினும் நன்மொழியாளையும் வணங்கி விட்டே திரும்பலாம். சாய்க்காட்டுக்கு வெகு தூரம் நடக்க வேண்டியதில்லை. உள்ளூர்க்காரரைக் கேட்டால் பல்லவனீச்சுரத்திலிருந்து கூப்பிடு தூரமே என்பார்கள். ஆனால் நடந்து போனால் ஒன்று ஒன்றரை மைலுக்குக் குறைவில்லை. பல்லவனீச்சுரத்துக்கு மேற்கே இருக்கிறது கோயில். ஆதிசேடனது நாகரத்தினம் இந்தக் காட்டில் ஒளி வீசிய காரணத்தால் இத்தலம் சாய்க்காடு என்று பெயர் பெற்றது என்பர். (சாய் என்றால் ஒளி என்று பொருள்தானே) உபமன்யு முனிவர் இங்கு வந்து பூசித்துப் பேறு பெற்றிருக்கிறார். கோயிலுக்கு எதிரே ஐராவதத் தீர்த்தம் இருக்கிறது. கோயிலை ஒட்டித் தேர் போன்ற விமானம் ஒன்றும் சக்கரத்துடன் இருக்கிறது. தேவர் கோனாகிய தேவேந்திரன் தன் தாயாருக்காக இக்கோயிலை அப்படியே விண்ணுலகத்துக்கு எடுத்துச் செல்ல முயன்றான் என்றும், அதில் தோல்வியுற்றான் என்றும் அவன் அன்று கொண்டு வந்த தேரே இன்றும் இருக்கிறது என்றும் அறிவோம். இக்கோயிலில் பதின்மூன்று கல்வெட்டுக்கள். பத்து, சோழர் காலத்தியது, மூன்று பாண்டியர்காலத்தியது. விக்கிரம சோழ தேவன், கோனேரின்மை கொண்டான், மூன்றாம் குலோத்துங்கன், திரிபுவனச் சக்கரவர்த்தி, சுந்தர பாண்டிய தேவன் முதலியோர் ஏற்படுத்திய நிபந்தங்களைப் பற்றியெல்லாம் கல்வெட்டுகள் கூறும்.

இந்த விவரங்கள் தெரிந்து கொள்ளத்தானா இங்கு வந்தோம் என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. நான் உங்களை இங்கு அழைத்து வந்தது இதற்காக எல்லாம் அல்ல. இங்கு ஒரு மூர்த்தி செப்புச் சிலை உருவில், பார்த்த உடனேயே தெரியும் அவன் சுப்பிரமணியன் என்று. வலது கையிலே சக்தி வேலைத்