பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

15


கடவூர் கால சம்ஹாரர்

மார்கண்டன் கதை சிரஞ்சீவித் தன்மை பெற்றதொன்று. மிருகண்டு முனிவனுக்குப் புத்திரப்பேறு இல்லை. அதற்காக அவன் தவம் புரிகிறான். அவன் தவத்துக்கு இரங்கிய இறைவன் 'நீண்ட ஆயுளும் குறைந்த அறிவுமுடைய புத்திரன் வேண்டுமா? இல்லை, குறைந்த ஆயுளும் நிறைந்த அறிவும் உள்ள புத்திரன் வேண்டுமா?' என்று கேட்கிறான். முனிவனோ 'புத்திரன் குறைந்த ஆயுள் உள்ளவனாக இருந்தாலும் பரவாயில்லை. நிறைந்த அறிவுடையவனாகவே இருத்தல் வேண்டும்' என்கிறான்.

மிருகண்டுவின் புத்திரனாய் மார்க்கண்டன் பிறக்கிறான். பதினாறு வயது வரையே அவன் இந்நில உலகில் வாழுதல் கூடும் என்று இறைவன் திட்டமாக உரைத்து விடுகிறான். பதினாறு வயது நிறைவெய்தும் காலம் வருகிறது. அன்னை தந்தையர் அனுமதியோடு, கடவூருக்கு வருகிறான். அங்கு கோயில் கொண்டுள்ள அமிர்தகடேசுவரரைப் பூசை செய்கிறான். அவன் பூசை செய்து கொண்டிருக்கும் பொழுதே அவனுக்குக் குறித்த பதினாறு வயது நிரம்பி விடுகிறது. வருகிறான் காலன். மார்கண்டன். மீது பாசக் கயிற்றையே வீசுகிறான். அவனோ பூசை செய்யும் லிங்கத் திருவுருவையே கட்டிப் பிடித்துக் கொள்கிறான்.