பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

147

அபிராமியைப் பூஜித்து அருள் பெற்றாள் என்றால் அதிகம் சொல்வானேன். இந்த அபிராமியினிடத்திலே அளவுகடந்த பக்தி கொண்டிருக்கிறார் ஒரு பட்டர். பக்திமுற்ற முற்ற உன்மத்தராகவே ஆகிவிடுகிறார். இதைக் கண்டு அர்ச்சகர்கள் அவரை வெறுக்கிறார்கள், பொறாமையே அடைகிறார்கள். ஒரு நாள் தஞ்சை மன்னன் வந்தபோது, அமாவாசையைப் பௌர்ணமி என்றே இவர் கூற, அதை வைத்தே அர்ச்சகர்கள் கயிறு திரிக்க தம் தவறை உணர்ந்த பட்டர் பாட ஆரம்பிக்கிறார். 'உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்' என்று துவக்கி எழுபத்து எட்டுப்பாட்டுக்கள் பாடி விடுகிறார். இனி எழுபத்து ஒன்பதாவது பாட்டு வருகிறது.

விழிக்கே அருளுண்டு அபிராம
வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு
எமக்கு, அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்
பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்
தம்மோடு என்னகூட்டு இனியே?

'தம்மோடு என்னகூட்டு இனியே?' என்று அவர் பாடி முடித்தாரே இல்லையோ, அபிராமி தன் காதில் இருந்த தோடு ஒன்றைக் கழற்றி ஆகாயத்திலே வீசி எறிகிறாள். அந்தத் தாடாங்கமே வான வீதியிலே பூரண சந்திர வடிவமாகக் காட்சி அளிக்கிறது. ஆம்! அமாவாசை அன்றே பௌர்ணமி நிலவு உதிப்பதைக் கண்டு அரசன் அர்ச்சகர்கள் எல்லாரும் வியந்து நிற்கின்றனர். பட்டரின் திருவடியில் விழுந்து வணங்கி அவரது மன்னிப்பை வேண்டுகின்றனர். இப்படி அவர் பாடிய நூறு பாட்டுக்கள்தான் அபிராமி அந்தாதி. இந்தப் பட்டரே அபிராமி பட்டர் என்றும் பெயர் பெறுகிறார். அந்தாதிப் பாடல்கள் எல்லாம் அருமை