பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

155

அப்பரும் தான்தோன்றியப்பரை நாவாரத் துதிக்கிறார்.

கண்ணார்ந்த நெற்றி உடையார்
போலும், காமனையும் கண் அழலால்
காய்ந்தார்போலும்,
உண்ணா அருநஞ்சம் உண்டார்
போலும், ஊழித்தீயன்ன
ஒளியார்போலும்,
எண்ணாயிரங்கோடி பேரார்
போலும், ஏறு ஏறிச்செல்வர்
இறைவர் போலும்
அண்ணாவும் ஆரூரும்மேயார்
போலும், ஆக்கூரில்
தான்தோன்றி அப்பனாரே.


என்பது அப்பர் பாடிய பத்துப் பாட்டில் ஒரு பாட்டு. இந்த ஆக்கூரில்தான் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் பிறந்து வளர்ந்து முத்தியடைந்திருக்கிறார். அடியார்களை எல்லாம் விருப்புடன் வரவேற்று உபசரித்து அன்னம் அளித்து அஞ்செழுத்து ஓதி ஈசன் திருவடி மறவாமல் வாழ்ந்து வந்தவர் அவர் என்பர் சேக்கிழார். சீர்கொண்ட வள்ளல் சிறப்புலியல்லவா அவர்.

இக்கோயிலிலும் கல்வெட்டுக்களுக்குக் குறைவில்லை. அதில் ஒரு கல்வெட்டு சோழமன்னர் காலத்தில் கிராம நிர்வாகம் எப்படி நடந்தது, அரசியல் எப்படித் தாழ்ந்திருந்தது என்பதைக் குறிக்கும். விஷயம் இதுதான்: இந்தக் கிராமத்தையடுத்த நடுவில் கோயில் என்ற பகுதியில் ராஜராஜ விண்ணகரம் என்று ஒரு விஷ்ணு கோயில் இருக்கிறது. இங்குள்ள பெருமானைத் திருமஞ்சனம் ஆட்ட வைகாசி மாதத்தில், சிவன் கோயிலை அடுத்துள்ள ஆனந்த புஷ்கரணிக்கே எடுத்துச் செல்லும் வழக்கம்