பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

157

கோயிலில் இருந்த ராஜராஜ விண்ணகரத்து எம் பெருமானைத் தேடித் திரிந்தேன். ஊராரோ அல்லது சிவன் கோயில் அர்ச்சகர்களோ அந்தக் கோயில் இருக்கும் இடம் சொல்லவில்லை. ஆனால் ஊர்ப்பிள்ளைகள் சிலர் ஊருக்குத் தென்பக்கத்தில் தோப்புக்குள்ளிருந்த ஒரு சிறு கோயிலுக்கு அழைத்துச் சென்றார்கள். அந்தக் சிறு கோயிலின் கதவோ சாத்தியிருந்தது. அக்கோயில் அர்ச்சகரைத் தேடிப் பிடிப்பதோ மிக்க சிரமமாக இருந்தது. அவரைக் கண்டு பிடித்துக் கோயிலைத் திறக்கச் சொன்னால் அந்தக் கோயில் ராஜகோபாலன் கோயில் என்று தெரிந்தது. கோயிலில் உள்ள கற் சிலைகளைவிட அங்கிருந்த செப்புச் சிலைகள் மிக்க அழகாயிருக்கின்றன.

அன்று கோகுலத்தில் பசுக்களை மேய்த்துத் திரிந்த கோபாலன் நல்ல ராஜ வடிவத்திலே உருவாகியிருக்கிறான். பின்னால் நிற்கும் பசுவின் பேரில் சாய்ந்து கொண்டு ஆநிரை மேய்க்கும் அழகான மூர்த்தியாக நிற்கிறான். அவன் அணிந்திருக்கும் அணிகளும் பணிகளும் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கின்றன. அவன் மாத்திரந்தானா நிற்கிறான் அங்கே? இல்லை, ஸ்ரீதேவி பூதேவி சமேதனாக நிற்கிறான். சோழர் காலத்துச் செப்புப் படிமங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு இந்த வடிவங்கள். ஏதோ இவையெல்லாம் கவனிப்பாரற்ற ஒரு சின்னக் கோயிலுக்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கின்றன. இப்படி எத்தனை எத்தனை வடிவங்களோ இந்தத் தமிழகத்துக் கோயில்களில்? ஆக்கூர் தான்தோன்றி நாதரையும், ஆயிரத்து ஒருவரையும் பார்க்கப் போன இடத்திலே இந்த ராஜகோபாலன் தம்பதிகளையும் பார்க்கக் கிடைத்தது நமது பாக்கியமே. இதனால்தான் சம்பந்தர் 'விண்ணொளிசேர் ஆக்கூர்' என்று பாடுகிறார். இப்படி சம்பந்தர் பாடிய பெருமையைச் சேக்கிழார் நினைக்கிறார்.