பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

வேங்கடம் முதல் குமரி வரை

பாராட்டி யிருக்கிறார்கள். இத்துடன் விட்டானா இவன்? கப்பற் படைகளைக் கடல் நடுவில் செலுத்தி இன்றைய மலேயாவில் ஒரு பகுதியான கடாரத்தையும் கைப்பற்றியிருக்கிறான். அதனால்தானே கல்வெட்டுக்களில் எல்லாம் 'பூர்வதேசமும், கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்' என்று இவன் மெய்க்கீர்த்தி பாடப்பட்டிருக்கிறது. இப்படி இவன் கங்கையையும் கடாரத்தையும் கொண்டதை,

களிறு கங்கைநீர் உண்ண, மண்ணையில்
காய் சினத்தோட கலவு செம்பியன்
குளிருதெண்திரை குண கடாரமும்
கொண்டு மண்டலம்குடையுள் வைத்ததும்

என்று ஜயங்கொண்டார், கலிங்கத்துப் பரணியில் பாராட்டியிருக்கிறார். கங்கை கொண்டதன் ஞாபகார்த்தமாகக் கங்கை கொண்ட சோழிச்சரம் எழுந்து நிற்பதை அறிவோம். மேலும் தெற்கே திருநெல்வேலி வரை இவன் யாத்திரை செய்திருக்கிறான் என்பதை வலியுறுத்த அங்கே கங்கைகொண்டான் என்றே ஒரு சிறிய கிராமத்துக்குப் பெயரிட்டு இருக்கிறான் என்பதையும் அறிவோம். ஆனால் கடாரம் கொண்ட வெற்றியை நிலைநிறுத்த ஒரு ஞாபகச் சின்னம் நிறுவினான் என்று சரித்திரம் திட்டமாகக் கூறவில்லைதான். கங்கை கொண்டதைவிட, கடல் கடந்து சென்று கடாரம் கொண்டதுதானே பெரிய வெற்றி. தன்னுடைய சிறந்த கப்பற்படையைக் கடல் நடுவில் செலுத்திக் கடாரத்து அரசனாகிய சங்கிராம விஜயோத் துங்கவர்மனைப் போரில் புறங்கண்டு, அவனது பட்டத்து யானையையும் பெரும் பொருளையும் வித்யாதர தோரணத்தையும் கவர்ந்து கொண்டு ஸ்ரீவிஜயம், பண்ணை, மலையூர், மாயிருடிங்கம், இலங்காசோகம், பப்பாளம் முதலிய இடங்களைக் (ஆம்! இன்றைய மலேயா, சுமத்ரா முதலிய தீவுகளில் உள்ள நகரங்களின் அன்றையப்