பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
162
வேங்கடம் முதல் குமரி வரை
 

வந்துவிட முடியாது. கொஞ்சம் சாவதானமாகவே போய்த் திரும்ப வேண்டும். செம்பொன்னார் கோயில், இல்லை, அந்தச் செம்பொன் செய் கோயில் சேர்ந்ததுமே அங்கு கோயில் கொண்டிருக்கும் சொர்ணபுரி ஈசுவரரையும் மருவார் குழலியையும் கண்டு வணங்கலாம். 'தேவர் சென்று வணங்கும் செம்பொன் பள்ளியான் மூவரால் முதலாய் நின்ற மூர்த்தி' என்பர் அப்பர், இக்கோயிலில் விசேஷமாகக் காண வேண்டியவை ஒன்றும் இல்லைதான். என்றாலும் கர்ப்பக் கிருஹத்தில் இருக்கும் மருவார் குழலி மற்றையக் கோயில்களில் காண்பது போன்று நான்கு திருக் கரங்களோடும் சமபங்க நிலையிலும் நின்று கொண்டிருப்பவள் அல்ல. மதுரை மீனாக்ஷியைப் போல் இரண்டே திருக்கரம். அதிலும் இடக்கரம் ஒயிலாகத் தொங்க விடப்பட்டும், வலக்கரம் உயர்ந்து செண்டேந்தியும் இருக்கும். செப்புச் சிலையில் வடிக்கும் அழகை, கற்சிலையிலேயே அமைத்துப் பார்த்து மகிழ்ந்திருக்கிறான் சிற்பி. சந்தணக் காப்பிட்டுக் கண் குளிரக் கண்டால் அம்மையின் அழகு முழுவதையும் அப்படியே அள்ளிப் பருகலாம்.

மருவார் குழலியைக் கண்டு தரிசித்த தெம்போடேயே நனிபள்ளி நோக்கி நடக்கலாம். போகிற வழியிலேயே இந்த நனிபள்ளிதான், திருஞானசம்பந்தரது தாயாகிய பகவதி அம்மையார் பிறந்த தலம் என்பார்கள். சின்னஞ்சிறு பிள்ளையாய்த்தாளம் ஏந்திப் பாடிக்கொண்டே சென்ற ஞானசம்பந்தர், தம் பாட்டன் பாட்டி வீட்டுக்கு வராமலா இருந்திருப்பார்? வந்திருக்கிறார், அங்குள்ள நற்றுணை அப்பரைப் பாடியும் இருக்கிறார்.

தோடு ஒரு காதனாகி
ஒரு காது இலங்கு
சுரிசங்கு நின்று புரளக்,