பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
169
 

விசாரித்தால் அவர்களே கங்கை யமுனை சரஸ்வதி என்ற தெய்வ நதிகள் என்றும் அவர்களிடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் தத்தம் பாவம் தீர முழுகிய காரணத்தால் அவர்களது பாவக்கறை யெல்லாம் இவர்களிடம் தோய்ந்து, இவர்களே சண்டாளர்களாக மாறிவிட்டார்களென்றும் அறிகிறார். சரிதான்; மற்றவர் பாவங்களையெல்லாம் கழுவிக்கழுவித் துடைத்தவர்களே பாபகாரிகளாக மாறிவிட்டால், இவர்கள் பாபங்களை யார் கழுவுவது? ஆம்! அப்படிக் கழுவும் ஆற்றல் பெற்றவள் ஒருத்தி இருக்கிறாள் என்று தெரிந்துதானே அவளைத் தேடித் தென்திசை நோக்கிச் சண்டாள உருவம் தாங்கிய இந்தத் தேவமாதர்கள் வந்திருக்கிறார்கள். எல்லோரது பாவங்களையும் நீக்கி முக்தி அருளவல்ல புனிதையே மாயூரத்தில் ஓடும் காவிரி அன்னை.

இப்படி இவள் பெருமையுற்றிருப்பதனாலேதான் துலா மாதத்தில் தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லஷ்மி, கௌரி இன்னும் பக்த மாதர்கள் எல்லாம் இங்கு வந்து நீராடுகிறார்கள். முப்பது நாளும் குளிக்க முடியாதவர்கள் மூன்று நாட்களாவது முழுக வேண்டும். அதுவும் இயலாதவர்கள் துலாமாதத்தின் கடைசி நாளான கடை முகத்தன்றாவது நீராடத் தவறுதல் கூடாது என்பது விதி. அப்படி நீராடியவர்கள் பாபமெல்லாம் அன்றே கழுவித் துடைக்கப்படும். (சரிதான்? வருஷம் முழுதும் செய்த பாவத்தை எல்லாம் ஒரே முழுக்கில் கழுவி விட்டு மறுபடியும் பாப காரியங்களே செய்யலாம். திரும்பவும் அடுத்த துலா ஸ்நானத்திலே; கழுவத்தான் அன்னை காவிரியிருக்கிறாளே என்று எண்ணி விடாதீர்கள், துலா மாதம் பிறப்பதற்கு முன்னமே காலன் நம்மை அணுகி விட்டால், அந்த வருஷப் பாவம் அத்தனையும் அப்படியே நின்றுவிடுமே என்ற எச்சரிக்கையும் ஞாபகமிருக்கட்டும்!)

இந்தக் கடைமுக ஸ்நானத்தை ஒட்டி இன்னும் ஒரு ரஸமான வரலாறு. எத்தனையோ கோடி வருஷங்களாக மக்கள் இத் துலா ஸ்நானம் செய்து வருகிறார்கள்;