பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
175
 

மண்டபத்துக்குத் தெற்கேயுள்ள விசுவநாதர் கோயில், இந்தக் காசி விசுவநாதரும் அவர் துணைவி விசாலாக்ஷியும் காசிக்கு வர இயலாத தமிழ் மக்களைத் தேடி, தமிழ் நாட்டுக்கு வந்து, இங்குள்ள எல்லாக் கோயில்களிலும் இடம்பிடித்து உட்கார்ந்து கொள்கிறார்கள்; தரிசனமும் கொடுக்கிறார்கள். கங்கையும் யமுனையும் சரஸ்வதியுமே இங்கு வந்து விட்டார்கள் என்று தெரிந்தபின், விசுவநாதரும் விசாலாக்ஷியும் இங்கு எழுந்தருளியதில் வியப்பில்லை. இவர்கள் வந்துவிட்டார்களே என்று காசித்துண்டி விநாயகர் பூதகணங்கள் எல்லோருமே புறப்பட்டு வந்து சேர்ந்திருக்கிறார்கள், இந்தக் காவிரிக்கரைக்கு. ஆகவே துலாக் காவேரி ஸ்நானத்துக்குப் போனால் மயிலாடு துறையார், வழி காட்டும் வள்ளலார், காசி விசுவநாதர் எல்லோரையும் கண்டு வணங்கித் திரும்பலாம்.

மாயூரம் வரை போய்விட்டு அடுத்துள்ள தருமபுரம் போகாமலும், அங்குள்ள ஆதீனத்தார் அவர்களைப் பாராமலும் திரும்ப முடியுமா? தருமை ஆதீனம் பழம் பெருமையுடையது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து வளர்ந்த குரு ஞானசம்பந்தர் செந்தமிழ்ச் சொக்கரை ஆத்மார்த்தமாகப் பூஜைபண்ணி, கமலை ஞானப்பிரகாசரிடம் உபதேசம் பெற்று, தருமபுரம் வந்து மடம் நிறுவியர்கள். இம்மடம் நாளும் வளர்ந்து இன்று இருபத்தேழு கோயில்களின் பரம்பரைத் தர்மகர்த்தர்களாக இருந்து வருகிறார்கள். இப்போது மடாதிபதியாக இருந்து அருளாட்சி செய்பவர்கள் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிய பரமாச்சாரிய சுவாமிகள். அவர்கள் செய்துவரும் அறப்பணிகள் அனந்தம். திருக்குறள் உரைவளம் வெளியிட்டதைத் தொடர்ந்து திருமுறைகளை யெல்லாம் அழகாக அச்சிட்டு வழங்குகிறார்கள். கல்வி கேள்விகளில் சிறந்த ரசிகர் அவர்கள். அவர்களைத் தரிசித்து, அவர்களோடு அளவளாவ, அவர்கள் அருள்பெற, எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் பாக்கியசாலிகளே. அந்தப் பாக்கியம் நிறைய எனக்கு உண்டு.