பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

வேங்கடம் முதல் குமரி வரை

இறைவன் படைத்த இயற்கை, மிக்க அழகுடையது ' என்பதை அறிவோம். விரிந்து பரந்து கிடக்கும் நீல வானம். அகன்று ஆழ்ந்து கிடக்கும் அக்கருங்கடல், அக்கடலின் அடி வானத்திலே உதயமாகும் இளஞ்சூரியன், அச் சூரியனிடமிருந்தே ஒளியைக் கடன் வாங்கி, அதை உலகுக்கு வழங்கும் குளிர் நிலா. அந்நிலாவோடு போட்டி போட்டு, மின்னி மினுக்கும் விண் மீன்கள் எல்லாம் நிரம்ப அழகு வாய்ந்தவையே.

இன்னும் இப்பூமியில் உள்ள மலை, மலையிலிருந்து விழும் அருவி, ஓடிப் பெருகும் ஆறு, ஆற்றங் கரையில் நின்று நிழல் தரும் மரங்கள், அம்மரங்களில் பூத்துக் குலுங்கும் பூக்கள், கனிகள், பரந்த வயல்களிலே பச்சைக் கம்பளம் விரித்தால் போல இலங்கும் நெற்கதிர்கள், புல் பூண்டுகள், ஊர்வன, பறப்பன, நடப்பன எல்லாம் இயற்கை அன்னையின் அழகு வடிவங்கள் தாமே. இவை தானே மனிதனால் ‘கைபுனைந்து இயற்றாக் கவின் பெறுவனப்பு'. இந்த வனப்பிலே உள்ளம் பறிகொடுத்து நின்ற கவிஞனே 'முற்றிய ஆழியிலே அலைவந்து மோதி எறிகையிலே கற்றைக் கதிர் எழும்' காட்சியைக் கண்டிருக்கிறான். 'உலகம் உவப்பப் பலர் புகழ் ஞாயிறு கடற்கண் எழும்' காட்சியிலே, அழகைக் கண்டிருக்கிறான்; இளமையைக் கண்டிருக் கிறான்; இறைமையைக் கண்டிருக்கிறான்.

விரிந்திருக்கும் நீலவானம் நீல நிறத் தோகையை விரித்தாடும் மயிலாகக் காட்சி அளித்திருக்கிறது. அந்த வானில் ஒளி வீசிக் கொண்டு தோன்றும் செஞ்சுடர்த் தேவனாம் இள ஞாயிறையே வேலேந்திய குமரனாகவும் கண்டிருக்கிறான். இன்னும் மேட்டு நிலங்களிலே தினைக் கதிர் விம்மி விளைந்து, அங்கு ஒரு காட்டு மயில் வந்து நின்றால் அங்கேயும் கலைஞன் உள்ளத்தில் காதல் விளைந்திருக்கிறது. இப்படித்தான் நீண்ட காலத்துக்கு