பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

181

உருவாக்கியிருக்கிறான் சிற்பி. இந்தச் சிற்பி வடிவத்தின் முதுகுக்கு மண்காட்டியிருக்கிறது இந்தக் கஜசம்ஹார செப்புச்சிலைவடிவம். யானையின் உள்ளே புகுந்து திருகிக்கொண்டு வரும் மூர்த்தியின் முன்பாகமும் பின்பாகமும் தெரியும்படி அல்லவா சிற்பி வடித்திருக்கிறான். என்ன அற்புதமான வடிவம்! பக்கத்திலே அஞ்சி ஒடுங்கும் அன்னை. அந்த அன்னையின் கரத்திலே தந்தையின் வெற்றி கண்டு மகிழும் குழந்தை முருகன். எல்லோருமே உருவாகியிருக்கிறார்கள் செப்புச் சிலை வடிவில், இந்தக் கஜசம்ஹார மூர்த்தத்தையே கபில பரணரும், சமய குரவர் மூவரும் பாடியிருக்கிறார்கள்.

பேரானை ஈர்உரிவைப்
போர்த்தானை, ஆயிரத்து எண்
பேரானை ஈர்உருவம்
பெற்றானைப் - பேரா நஞ்சு
உண்டானை, உத்தமனை
உள்காதார்க்கு எஞ்ஞான்றும்
உண்டா நாள் அல்ல உயிர்

என்று சங்கப் புலவர் பாடி மகிழ்ந்தால்,

விரித்தபல் கதிர்கொள் சூலம்
வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோலகால
பயிரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக்கண்டு
ஒண்திரு மணிவாய் விள்ளச்
சிரித்து அருள்செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே

என்று அப்பர் பாடுகிறார். இப்படிக் கவிதை வளர்த்த கலையாக, கஜசம்ஹாரர் நிற்கிறார் இக்கோயில் உள்ளே.