பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

வேங்கடம் முதல் குமரி வரை

இந்தப் பிக்ஷாடனர், கஜசம்ஹாரரையெல்லாம் பார்த்த பின் இங்கு பார்க்கவேண்டியவை ஒன்றுமே இராது. செப்பு வடிவத்தில் இருக்கும் நடராஜர் அவ்வளவு அழகான சிற்பம் இல்லை, அவரையும் தரிசித்துவிட்டு லிங்க உருவில் இருக்கும் மூலவரைத் தரிசிக்கலாம். இந்த மூலமூர்த்தியே விரட்டேசுவரர். வடமொழியில் கிருத்திவாஸேசுவரர் என்பர். அதற்கு யானையின் தோலைப் போர்த்தி அருளியவர் என்றுதான் அர்த்தம். இங்கு அம்மன் சந்நிதி கோயிலின் வட பக்கத்தில் தனித்திருக்கிறது. இவளையே பாலகுராம்பிகை என்றும் இளங்கிளைநாயகி என்றும் கூறுவார்கள். இளங்கிளை எவ்விதம் அழகு வாய்ந்ததாகவும், வளர்ச்சி உடையதாகவும் காணப்படுகிறதோ அவ்வாறே உலகத்தில் உயிர்களைத் தோன்றச் செய்து அவை வளர்ச்சி அடைய அருளுகிறாள் என்பது பொருள். இவளுக்கே கிருபாவதி என்ற பெயரும் உண்டு. இன்னும் இத்தலம் தீர்த்த விசேஷத்தாலும் சிறப்புற்றது. இறைவனுக்கு ஐந்து முகங்கள் என்பார்கள். ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியயோசாதம் என்பவை அவை என்றும் விளக்குவார்கள். இந்த ஐந்து முகங்களின் பேராலும், ஐந்து தீர்த்தங்கள் இக்கோயிலையொட்டி உருவாகியிருக்கின்றன. போதிய அவகாசத்தோடு கோயிலுக்குப் போகிறவர்கள் இத்தீர்த்தங்களில் நீராடி, புராணங்களில் சொல்லியிருக்கின்ற அத்தனை பலன்களையுமே பெறலாம். மாசி மகத்தன்று இக்கோயிலில் பெரிய விழா நடைபெறுகிறது. அன்று உதயத்தில்தான் கஜசம்ஹார விழா நடனக்காட்சி. மார்கழித் திருவாதிரை அன்றுமே கஜசம்ஹார நடனம் சிறப்பாக நடைபெறும். திருவாதிரைக்கு முந்திய நாள் புனர்பூசத்தில் கஜசம்ஹாரரை வெண்மையாக அலங்காரம் செய்து பக்தர்கள் கண் குளிரக் காண்பார்கள். கோயில் நிரம்ப வருவாயுள்ள பெரிய கோயில் அல்ல; என்றாலும் இந்த இறைவன் ஏழையுமன்று, இந்த வீரட்டானேசுவரருக்கு