பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

வேங்கடம் முதல் குமரி வரை

கிடையாது. அத்தனை வறட்சி இப்பக்கத்தில் இந்தக் காவிரி நாட்டிலே என்றால் வியப்புத்தான். கோயில் கிழமேல் 242 அடி, தென்வடல் 169 அடி என்றால் கொஞ்சம் அளவிட்டு அறிந்து கொள்ளலாம் தானே? கோயிலுள் சென்றதும் அக்கினி பாகத்தில் புன்னை மரத்தடியில் ஆதி மூர்த்தியாம் சிவபிரான் எழுந்தருளியிருக்கிறார். புன்னையே இங்கு தல விருக்ஷம். பக்கத்திலேயே 'அன்னமாம் பொய்கை' ஒன்றும் இருக்கிறது. மலை ஏறு முன்னரே படிக்காசு விநாயகரை வணங்கிவிட வேண்டும்.

கடிக்காசு வளர்படப் பூண்
முடிக்காசு மதியொடு அணி
கடவுள் எங்கள்
குடிக்காசு தவிர்த்து அருள்
செய் படிக்காசு மழகளிற்றை
குறித்து வாழ்வாம்

என்று மகாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடிய பாட்டையே பாடிப் பரவலாம். இனி கட்டு மலை மேல் ஏறினால் அங்கு பிரம்மபுரி ஈசுவரர் லிங்கத் திருவுருவில் காட்சி கொடுப்பார். இந்த லிங்கத் திருவுரு இருக்கும் கருவறையின் உட்சுவரிலே கைலாசநாதன், உமை, கந்தன் சகிதம் உப்புச உருவிலே இருப்பான். இங்கு செப்பு விக்ரஹங்கள் நிறைய இருக்கின்றன. அம்பர் நகர்ப் பெருங்கோயில் அமர்ந்த இந்த இறைவனை வணங்கிவிட்டு மலையைவிட்டு இறங்கி, தெற்கு நோக்கியிருக்கும் சுகிர்த குந்தளாம்பிகையின் சந்நிதிக்கு வரவேணும். பூங்குழல் அம்மை என்று அழைக்கப்படும் இந்த அம்பிகை அழகான திருவுரு. இவர்களைத் தரிசித்த பின் சுற்றுக் கோயில்களில் உள்ள பரிவார தெய்வங்களையுமே கண்டு வணங்கலாம். இத்தல புராணத்தைப் புரட்டினால், பிரமன் பூசித்து அருள் பெற்றது, சம்ஹார சீலனை வதம் செய்த விமலன் அருள்