பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/198

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
196
வேங்கடம் முதல் குமரி வரை
 

வேண்டுகிறார். 'இப்போது அவன் உதவான்' என்று சொல்லிப் பார்த்தும் கேளாததால், அவர் விரும்பியபடியே வெளியே சென்று ‘மைந்தா! வருவாய்' என்று அழைக்கிறார் சிறுத்தொண்டர். நங்கையும், 'செய்யமணியே சீராளா! வாராய் சிவனார் அடியார் யாம் உய்யும் வகையால், உடன் உண்ண அழைக்கின்றார்' என்றே ஓலமிடுகின்றாள். அப்பொழுதே சீராளன் பள்ளியிலிருந்து ஓடி வருபவன் போல ஓடி வருகிறான். வந்த உத்தராபதியாரும் மறைந்து ரிஷபாரூடராகக் காட்சி அளிக்கிறார். என்னே இவர் தம் திருத் தொண்டின் உறைப்பு? வாளால் தன் மகவையே அரிந்து சிவனடியாருக்கு ஊட்ட முனைகின்ற தொண்டு எவ்வளவு சிறந்தது? இப்படித் தொண்டு செய்தவர்தான் சிறுத் தொண்டர் என்னும் அரிய பெரிய தொண்டர். அவர் பிறந்து வளர்ந்த பதியே திருச் செங்காட்டாங்குடி. அந்தப் பழங் குடிக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருச்செங்காட்டாங்குடி, தஞ்சை ஜில்லாவில் திருவாரூர் - மாயூரம் ரயில்பாதையில் நன்னிலம் ஸ்டேஷனுக்குக் கிழக்கே ஏழு மைல் தொலைவில் இருக்கிறது. ஸ்டேஷனிலிருந்து வண்டி வைத்துக் கொண்டு செல்லலாம். தஞ்சை ஜில்லாவில் மொட்டை மாடுகள் பூட்டிய வில் வண்டிகள்தான் பிரசித்தமானவை ஆயிற்றே. இல்லை, கார் வசதி உடையவர்கள் எல்லாம் அந்த நன்னிலம், நாகப்பட்டினம் சாலையில் திருப்புகலூர் போய் முடிகொண்டான் ஆற்றின்மீது சமீபகாலத்தில் கட்டியிருக்கும் பாலத்தைக் கடந்து கண்ணபுரம் வழியாய்ப் போகலாம். இந்தத் திருப்புகலூர்,கண்ணபுரத்தில் உள்ள கோயில்களுக்குமே நாம் இனிப் போகப் போகிறோம். ஆதலால் நேரே விறுவிறு என்று வண்டியையோ காரையோ நன்னிலம் ஸ்டேஷனுக்கு நேர்கிழக்கே எட்டுமைல் தொலைவில் உள்ள திருமருகலுக்கே தட்டிவிடலாம். அதுதானே செங்காட்டாங்குடிக்குப் பழைய பாதை.