பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
198
வேங்கடம் முதல் குமரி வரை
 

கடையனாய் எனுமால், சரன் நீ எனுமால் விடையாய் எனுமால், வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே?

என்று தான் கேட்கிறார் மருகல் உறை மாணிக்கத்தை. விடம் தீண்டிய செட்டி உயிர் பெற்று விடுகிறான். (அன்பர்கள் கேட்கலாம். காதலரின் உடன் போக்குக்கு இறைவனும் அடியாரும் துணை நிற்கிறார்களே, ஆதலால் உடன் போக்கில் ஈடுபடுவர்களை உற்சாகப்படுத்தலாம் போல் இருக்கிறதே என்று. உற்சாகப்படுத்தலாம். ஆனால் ஒன்று மட்டும் ஞாபகம் இருக்கவேண்டும். இடையில் துயர் வரும் என்பதும், அத்துயர் துடைக்க இப்போதெல்லாம் ஞான சம்பந்தரைப் போன்ற அடியார்கள் கிடையாது என்பதும்) மருகல் கோயிலில்பார்த்து அனுபவிக்க வேண்டிய சிற்ப வடிவங்கள் இல்லை. ஆனால் தெற்கு வாயிலுக்கு எதிர்புறம் சீராளன் படித்த பள்ளி இருக்கிறது. அந்தப் பள்ளியில் இன்றைய தேவஸ்தானம் ஆபீஸ் இருக்கிறது. அதையும் பார்த்துவிட்டு மேற்கு நோக்கி இரண்டு மைல் சென்றால் செங்காட்டாங்குடி வந்து சேரலாம். (ஒரே ஒரு எச்சரிக்கை. மழை காலத்தில் வண்டியோ, காரோ ஒன்றும் போகாது. நடந்துதான் போகவேண்டும். ஆகையால் நல்ல வேனிற் காலத்திலேயே போய்த்திரும்பலாம். ஆம். சித்தரைப் பரணியில்தானே அங்கு அமுது படையல் விழா. அதற்குப் போனால் போகிறது)

தூரத்தில் வரும்போதே கோபுரம் தெரியும். அதனால் நேரே கோபுரத்தை நோக்கியே நடந்து விடக் கூடாது. கோபுரம் எப்போது கீழே விழுவோம் என்று காத்துக் கொண்டிருப்பதால் வாயிலை நன்றாகச் சுவர் வைத்து அடைத்திருக்கிறார்கள். கோபுர வாயிலுக்கு வட பக்கத்தில் மதிலை வெட்டி ஒரு பாதை அமைத்திருக்கிறார்கள். நாம் அந்தப் பாதையைக் கூட விட்டு விடலாம்.