பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

207

இருக்கமுடியுமா? தன் சக்கரத்தைப் பிரயோகித்துச் சோழமன்னனது வீரர்களைத் தூரத்தி அடித்திருக்கிறான். இன்னும் இதை ஒட்டியே ஒரு வரலாறு, சோழமன்னன் இப்படி மதிலைத் தகர்க்கும் போது அவனது மகனே, 'தந்தையே! இவ்வுலகில் திருவாய் மொழியும் ராமாயணமும் இருக்கும் வரையில் உம்மால் மாத்திரம் அல்ல உமது பேரனுக்குப் பேரனால்கூடவைஷ்ணவத்தை அழித்து விட முடியாது' என்று கூறித்தடுத்திருக்கிறான் என்றும் கூறுவர். கற்பனையில் எழுந்த மதில்கள் கற்பனையிலே அழிந்திருக்கிறது என்றாலும் அவைகளைச் சுற்றி எழுந்த கற்பனைக் கதைகள் சுவை உடையதாகவே இருக்கின்றன.

இனி நாம் மகா மண்டபத்தைக் கடந்து கர்ப்பக்கிருஹம் வந்து சேர்ந்து கண்ணபுரத்து அம்மானைக் கண்டு தொழவேண்டும். கருவறையில் பரமகம்பீரத்துடன் நிற்பவனே நீலமேகன். தங்கநீள் முடிகவித்த அரிய பொன் மேனியன், ஆஜானுபாகு என்பார்களே அதன் அர்த்தம் இந்தப் பெருமானைத் தரிசிக்கிறபோது தெரியும், சங்கு ஒரு கையும், பிரயோகச் சக்கரம் ஒரு கையுமாக அபயம் அளிக்கும் வரதன் அவன். அவன் அணிந்திருக்கும் அணி பணிகள் எல்லாம் ஒரே தங்கமயம். சஹஸ்ரநாம மாலை ஒன்றே பல்லாயிரம் ரூபாய் விலை பெறும். இரண்டு நாச்சியார்களையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே சேவை சாதித்து அருளுவான். இன்னும் இவனது இருமருங்கிலும் தண்டக மகரிஷியும் கருடாழ்வாரும் கூப்பிய கையுடன் நிற்கின்றனர். எல்லாம் நல்ல சிலாவடிவங்கள், இந்த மூலவராம் நீலமேகனுக்கு முன்னாலேயே 'காமனும் கண்டு காமுறும் கண்ணபுரத்து அமுதனான' உற்சவமூர்த்தி நிற்கிறான். இவனுக்கு சௌரிராஜன் என்று திருநாமம். சூரர் என்னும் வசுதேவரது மகனானதால் இப்பெயர் என்றாலும் மக்கள் சௌரியைச் சவுரியாக்கி, அவரது தலையில் சவுரியையும் அணிவித்து அதற்கு ஒரு கதையையும் கட்டி இருக்கிறார்கள். கோவில் அர்ச்சகர் ஒருவர் தாசிலோலர்.