பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

வேங்கடம் முதல் குமரி வரை

சிந்தனையைத் தூண்டியது. உலகில் உள்ள மக்கள் எல்லோரும் எப்படியேனும் போகட்டும். அவர் புகழ்பாட, அவரது சமயத்தைப் பரப்புவதற்கென்றே பிறந்தார்களே, அந்தச் சமயகுரவர் நால்வரிடத்தும் கூட ஒரே நிலையில் இந்த இறைவன் அன்பு காட்டவில்லையே. மூன்று வயது நிரம்புவதற்கு முன்னமேயே ஒருவருக்கு அவர் 'அம்மையே அப்பா!' என்று அழைத்த உடனேயே ஓடிவந்து அன்னையை ஞானப்பாலையே ஊட்டச் சொல்லியிருக்கிறார். இன்னும் ஒருவரை, அவர் திருமணம் செய்யமுனைந்தபோது, தடுத்து ஆட்கொண்டு, அவரைத் தம்பிரான் தோழர் என்று அழைத்து, அவர் ஏவிய பணிகளையெல்லாம் செய்து, அவருக்கு ஒன்றுக்கு இரண்டு மனைவியரைச் சேர்த்து வைத்திருக்கிறார். மேலும், பாண்டியன் கொடுத்த பணத்தோடு குதிரை வாங்கவந்தவரை எதிர்கொண்டு, திருப்பெருந்துறையிலே குருந்த மரத்தடியிலே எழுந்தருளி ஞானோபதேசம் செய்து, அவருக்காக நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கி, பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்டு, வாழ்வித்திருக்கிறார்.

இப்படி சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் முதலிய மூவரிடத்தும், அவர்கள் விரும்புவதற்கு முன்னமேயே விழுந்தடித்துக்கொண்டு ஓடி அவர்கள் பால் தம் அருளைக் காட்டியவர், இந்தத் தருமசேனராம் நாவுக்கரசரிடம் மட்டும் பாரபக்ஷம் காட்டுவானேன்? ஏதோ உண்மை காண விரும்பும் ஆர்வத்தால் மதம் மாறினார் என்பதற்காக, அவரை யானையை விட்டு இடறச் செய்வானேன்? நீற்றறையில் போடுவானேன்? விஷம் கொடுப்பானேன்? கல்லில் கட்டிக் கடலில் தள்ளுவானேன்? இப்படியெல்லாம் நினைத்துப் பார்த்தால் நண்பரைப் போல நாமும் இறைவனுடைய பக்ஷபாதத்தை எண்ணித் துயரே உறுவோம். இத்தனை துயரைக் கொடுப்பதன் மூலம் இறைவன் நாவுக்கரசரைப் புடம் இட்ட தங்கமாக ஆக்குகிறான் என்று நினைத்தால்தானே நம் எண்ணம் மாறும். நாமும் வாழ்வில்