பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

217

சுரரையும் வணங்கியபின் வெளியே வந்து உட்பிராகாரத்தைச் சுற்றினால், சந்திரசேகரர், திரிபுராந்தகர் அக்கினி, பிரம்மா முதலியவர்களையெல்லாம் செப்புச் சிலை வடிவில் காணலாம். பிரம்மா அளவில் சிறியவர்தான் என்றாலும் அழகில் சிறந்தவர். இவருக்கு வேண்டாத திருவாசி ஒன்றை இன்று செய்து வைத்திருக்கிறார்கள். அக்கினி பகவான் இல்லாமல் நாம் வாழமுடியாது. என்றாலும் அவர் திரு உருவை இதுவரை அறியோம். இரண்டு முகங்கள், ஏழுசுடர்கள், மூன்று பாதங்கள், ஏழு கைகள் என்றெல்லாம் அமைத்துக்கொண்டு எழுந்தே நிற்கிறார் அவர்.

இக்கோயில் கர்ப்பக் கிருஹங்களைச் சுற்றிய கோஷ்டங்களில் அகஸ்தியர், நடராஜர், கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் மாத்திரம் அல்ல, அஷ்டபுஜ துர்க்கை, சதுர்புஜதுர்க்கை, கௌரிலீலா விநோதர் எல்லோருமே இருக்கிறார்கள். ததீசி, பிருகு, புலஸ்தியர், ஜாபாலி முதலியோர் பூசித்த லிங்கங்கள் பல இருக்கின்றன இங்கே. இவர்கள் வரிசையிலேயே வாதாபி கணபதி வேறே வந்து இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். 'ஒரிஜினல்' வாதாபி செங்காட்டாங்குடியில் இருப்பதால், இவர் 'டூப்ளிகேட்' வாதாபியாகவே இருத்தல் வேண்டும். இன்னும் வடக்குத் திருமாளிகைப் பத்தியில் சனி பகவான், நளன், அன்னபூரணி, சரஸ்வதி எல்லோருமே இருக்கிறார்கள். நவக்கிரகங்கள் இங்கு மற்றக் கோயில்களில் இருப்பது போல் இருப்பது இல்லை. 'ட' என்ற அமைப்பிலே இருக்கிறார்கள். வியாழ குரு தான் 'டா'னா உத்தியோகம் பார்ப்பவர் என்று அறிவோம். எல்லாருக்குமே அந்த உத்தியோகத்தில் மோகம் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் என்னவோ? இதே பத்தியில் திரிமுகாசுரன் வேறே நின்று கொண்டிருக்கிறான். நான்முகனுக்குச் சவால் விடுபவன் போல, பன்றி முகத்தால் நீரும், பறவை முகத்தால் மலரும் கொண்டு வந்து மனித முகத்தால் இறைவனை வழிபட்டிருக்