பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

வேங்கடம் முதல் குமரி வரை


இதே சமயத்தில் கணத் தலைவர் களில் ஒருவரான சங்கு கன்னர் செய்த ஒரு தவறுக்காக இறைவன் அவரைப் பூலோகத்தில் மனிதனாகப் பிறக்கும்படி சபிக்கிறார். சாப விமோசனம் வேண்டி நின்றபோது, 'நீ பூமியின்கண் அவதரித்து வேத சிவாகமங்களை விளக்கி, சைவம் நன்கு வளரச் செய்து, பல சித்தர்களுக்கு அருள் செய்வாய்; அப்போது முருகனோடயே போர் செய்யும் நிலை வாய்க்கும், அப்போது முத்தி அடைவாய்' என்கிறார்.

அந்தச் சங்கு கன்னராம் கணத் தலைவரே, மயிலை மலைக்கு கிழக்கேயுள்ள கடலிலே, பத்து வயதுடைய பால சித்தராக, சடைமுடி கவச குண்டலம், இட்டலிங்கம், உருத்திராக்கத்துடன் தோன்று கிறார். மயில மலைக்கே வந்து தவம் இயற்றுகிறார் முருகனைக் குறித்து. முருகனோ அவர் சிவ அபராதி எனச் சொல்லித் தரிசனம் தர மறுக்கிறார். பால சித்தருக்குப் பரிந்து பேசி வெற்றிபெறாத வள்ளி தெய்வானை இருவரும் கோபித்துக்கொண்டு, பால சித்தரது ஆசிரமத்துக்கே வந்து அவருக்குப் பாதுகாப்பு அளிக்கிறார்கள். இனியும் முருகப் பெருமானால் சும்மா இருக்க முடியுமா? தன் மனைவியரைத் தேடிக்கொண்டு மயிலமலைக்கே வருகிறார். பால சித்தரும் வந்திருக்கும் வேட்டுவன் யார் என்று அறியாது அவரோடு போர் புரிகிறார்; மல்யுத்தமே செய்கிறார். பின்னர் பால சித்தருக்கும் சூரபதுமனுக்கும் முருகன் தம் உருக் காட்டுகிறார். தம் இரு மனைவியருடனும், பால சித்தர் விருப்பப்படியே கல்யாண கோலத்திலேயே அம்மலைமீது கோயில் கொள்கிறார். இப்படித்தான் மயில மலை எழுந்திருக்கிறது இங்கே. அந்த மலைமேல் முருகனும் ஏறி நின்றிருக்கிறான். பால சித்தரது அருளால் அம்மனை அம்மையார் திருவயிற்றில் அவதரித்த சித்தரே, சிவஞான பாலய தேசிகர், பொம்மையபுரம் திருமடம் நிறுவியவர்.