பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

வேங்கடம் முதல் குமரி வரை

கிறான் இந்த அசுரன். இவனே இந்த வழிபாடு காரணமாக, புன்னை மரமாகி, அங்கேயே ஸ்தல விருட்சமாகவும் நிற்கிறான்.

இப்படியே வளர்த்திக் கொண்டு போவானேன்? இது நாவுக்கரசர் முத்தி பெற்ற தலம் என்று முதலிலேயே பிரமாதப்படுத்தினீர்களே, அவருக்கு என்று தனிச்சந்நிதி கிடையாதா என்று ஆதங்கப்படுகிறீர்கள் நீங்கள். அப்பூதி அடிகள் பெயரிட்டது போல இங்கு நாவுக்கரசர் திருமடம், நாவுக்காரசர் நந்தவனம் என்றெல்லாம் இருக்கும்போது நாவுக்கரசர சந்நிதி இல்லாமல் இருக்குமா? மேலைத் திருமாளிகைப் பத்தியில் ஒரு சின்னஞ்சிறு கோயிலில் கல்லிலும் செம்பிலும் நாவுக்கரசர் நிற்கிறார், தனது ‘பேடன்ட்' ஆயுதமான உழவாரப் படையுடன். பழைய செப்புவடிவம் மிகச் சிறியதாக இருக்கிறது என்று கண்டு பெரிய உரு ஒன்றையே சமீபத்தில் செய்து வைத்திருக்கிறார்கள். அளவில் சிறியவர் என்றாலும் சாந்தித்யம் அந்தச் சின்ன நாவுக்கரசருக்கே.

இக்கோயிலின் பெரியவிழா சித்திரைச் சதயத்தை ஒட்டி நடக்கும் அப்பர் திருநாள் தான். பத்து நாள் உற்சவம். அப்பர் சரித்திரம் முழுவதையுமே தெரிந்து கொள்ளலாம் இவ்விழாவுக்குப் போனால். அதிலும் நான்காவது தெப்பத்திருநாளன்று ஒரே கோலாகலம். அன்று மகேந்திரவர்மன் அப்பரைக் கல்லில் கட்டிக் கடலில் எறிந்தான் என்றும் அந்தக் கல்லே அவருக்குத் தெப்பமாகிக் கரையேறினார் என்றும் அறிவோம். ஆனால் இன்றோ அதே அப்பருக்கு மிகப் பெரிய தெப்பம் ஒன்று அமைத்து மின்சார விளக்குகளால் அலங்கரித்து, அக்கினி தீர்த்தத்தில் மிதக்க விடுகிறார்கள். எனக்கு மட்டும் ஒன்று சரியல்ல என்று படுகிறது. 'கந்தை மிகையாம் கருத்துடைய அப்பருக்கு நவரத்தினப் பதக்கங்கள் அணிவித்து அழகு செய்து தெப்பத்தில் ஏற்றுகிறார்கள். அணிசெய்ய வேண்டுமானால், எல்லாம் உருத்திராக்க மாலைகளாகவே இருக்கலாம்.