பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/225

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
223
 

இன்னொரு தாமரை மலர் தேடித்திரியவோ நேரமும் இல்லை. அப்போது தோன்றியிருக்கிறது நமது கண்களுமே நல்ல தாமரை மலர்கள் தானே என்று. உடனே அந்தத் தாமரைக் கண்ணன் தம் கண்களில் ஒன்றையே இடந்து இறைவனுக்குச் சாத்தியிருக்கிறார். அருச்சனையும் குறைவுபடாமல் நிறைவு பெற்றிருக்கிறது. இறைவனும் திருமால் விரும்பியபடியே அவருக்குச் சக்கரத்தை அருளியிருக்கிறார். இப்படித் திருமால் தம் கண்ணையே இடந்து சாத்திய தலம்தான் திருவீழிமிழலை (விழிக்கும் வீழிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. மிழலை என்பது ஊரின் பெயர், வீழி என்பது அங்கு கிடைக்கும் ஒரு கொடி. அந்தக் கொடியின் பெயரையும் சேர்த்தே வீழிமிழலை என்று அழைக்கப் படுகிறது) இப்படித் திருமால் வழிபட்ட செய்தியை,

நீற்றினை நிறையப்பூசி, நித்தம்
ஆயிரம் பூக் கொண்டு
ஏற்றுழி, ஒருநாள் ஒன்று குறைய
கண் நிறைய விட்ட
ஆற்றலுக்கு ஆழிநல்கி, அவன்
கொணர்ந்து இழிச்சுங் கோயில்
வீற்றிருந்து அளிப்பர், வீழி
மிழலையுள் விகிர்தானாரே.

என்று பாடுகிறார் அப்பர். மணவாளக் கோலத்தோடு அக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருவடியில் திருமால் தம் கண்ணைப் பறித்து அருச்சித்த அடையாளமும் கீழே சக்கரமும் இருப்பதை இன்றும் பார்க்கலாம். இத்தகைய புகழ்பெற்ற தலமாகிய திருவீழிமிழலைக்கே செல்கிறோம் நாம் இன்று.

‘காதல் வழி கரடு முரடானது' என்பர். திருவீழி மிழலைக்குச் செல்லும் வழியோ அதைவிட மிகக் கரடு முரடானது. இத்தலத்துக்கு எத்தனையோ வழிகள் உண்டு.