பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

227

அன்று அரி வழிாட்டு
           இழிச்சிய விமானத்து இறைவன்
                      பிறை அணி விமானம்

அது என்பார் சம்பந்தர். இந்த விமானத்திலேதான் சம்பந்தர், சீகாழியில் தன்னை ஆட்கொண்ட தோணியப்பரைத் தரிசித்திருக்கிறார். சீகாழிக்கு வரவேண்டும் என்று அழைத்த அடியவர்களுக்கும் காட்டி இருக்கிறார். “பொன்னியல் மாடம் நெருங்கு செல்வுபுகலி நிலாவிய புண்ணியன், மிழலை விண்ணிழிகோயில்' விரும்பி வந்திருக்கிறார். அடியவன் செல்லும் இடமெல்லாம் ஆண்டவனும் தொடர்ந்தே வருகிறான் என்பதுதான் எவ்வளவு எளிதாக விளங்குகிறது நமக்கு. ஆலயத்தின் முதற் சுற்றிலே இருக்கும் நூற்றுக்கால் மண்டபம் சிற்ப வேலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அங்கு கல்லாலேயே அமைத்துள்ள கொடுங்கைகளும், வளைவுகள் நிரம்பிய கல்தூண்களும், வௌவால் ஒட்டுமண்டபமும் பார்த்துக்கொண்டு நின்று விடுதல் கூடாது. கோயிலுக்குள் சென்று நேத்திரார்ப்பணேசுரரையும் அவர்தம் துணைவி சுந்தர குசாம்பிகையையும் முதலில் வணங்கலாம். அப்படி வணங்கும்போதே மூல லிங்கத்துக்குப் பின் கர்ப்பக்கிருகச் சுவரில் பார்வதி பரமேசுவரருடைய திரு உருவங்கள் இருப்பதையுமே காணலாம். இனி மகா மண்டபத்துக்கு வந்து அங்கு தெற்கு நோக்கிய ஒரு பீடத்தில் எழுந்தருளியுள்ள கல்யாண சுந்தரமூர்த்தியைத் தரிசிக்கலாம். இவரே கார்த்தியாயன முனிவரின் மகளாக அவதரித்த கார்த்தியாயனியை மணந்து கொண்டு, என்றுமே 'மாப்பிள்ளைச்சாமி'யாக நிற்பவர், இவரது திருவடியிலேதான் மால் அருச்சித்ததாமரைக் கண் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதையுமே அர்ச்சகர்களைக் காட்டச் சொல்லிக்கண்டு மகிழலாம். அவர் கையிலே செண்டு என்னும் ஆயுதம் இருப்பதைக் காணலாம். மாப்பிள்ளைக்கோலத்தில் இருப்பவர்க்கு ஏன் இந்தச் செண்டு என்று தெரியவில்லை!