பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/232

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
230
 

தமிழோடு இசை கேட்கும் ஆசையினால்தானே இறைவன் இவர்களுக்குக் காசு கொடுத்திருக்கிறான் என்பதையும் தெரிந்திருக்கிறார். இவரோ தாம் போகும் இடங்களில் எல்லாம் இறைவனிடம் கூசாமல் கை நீட்டுபவர். இங்கே சும்மா இருப்பாரா? இவருமே நீட்டியிருக்கிறார்.

திருமிழலை இருந்து நீர்தமிழோடு
இசைகேட்கும் இச்சையால்
காசு நித்தம் நல்கினீர்
அருந்தண் வீழி கொண்டீர்
அடியேற்கும் அருளிதிரே

என்றே பாடியிருக்கிறார். ஆசாமிதான் பொல்லாதவர் ஆயிற்றே. காசு பெறாமலா மேலே நடந்திருப்பார்?

இக்கோயிலில் மதுரை கொண்ட கோப்பர கேசரிவர்மன் ராஜராஜன் முதல் மூன்றாம் ராஜேந்திரன் வரையுள்ள சோழ மன்னர்கள், ஜடாவர்மன், சுந்தரபாண்டியன் இன்னும் விஜயநகர மன்னனான வீரப்பண்ண உடையார்கள் காலங்களில் எல்லாம் ஏற்படுத்திய நிபந்தங்களைப்பற்றிய கல்வெட்டுக்கள் நிறைய இருக்கின்றன. கல்வெட்டுக்களில் இறைவனைத் திருவீழிமிழலை உடையான் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்குள்ள திருமேனிகளில் பிரசித்தமானவை நின்றருளிய நாயனார் நெறிவார் குழல் நாச்சியார் என்றும் தெரிகிறது. இன்னும் திருவீழிமிழலை உடைய மகாதேவர் கோயிலைப் பொன்வேய்ந்தவன் விஜயராஜேந்திர தேவர் அணுக்கியார் பல்லவன் பாட்டாளி நங்கை என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. திருமுறைகள் ஓததி திருக்கைகொட்டி மண்டபம் ஒன்றைக் கட்டி அதற்கு நில நிபந்தம் ஏற்படுத்தியிருக்கிறான் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன். இன்னும் எத்தனை எத்தனையோ தகவல்கள். இதையெல்லாம் தெரிந்து வீழிமிழலை விகர்தர்தம் அருளும் பெற்றுவிட்டால் அங்கிருந்து மீண்டு வருவதே அரிதாக இருக்கும். 'அறிவது அறிகிறார், வெறிகொள் மிழலையீர்! பிரிவது அரியதே' என்பதுதானே சம்பந்தர் தேவாரம்.