பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/234

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
232
வேங்கடம் முதல் குமரி வரை
 

கொள்வார் சிவன். இன்னும் சில ஊர்களில், ஒரு வீட்டுக்குள்ளேயே (ஆம், கோயிலுக்குள்ளேதான்) இருவரும் இடம்பிடித்துக் கொள்வார்கள். பிரபலமான தில்லைச் சிற்றம்பலத்திலே ஆடும் பெருமானான நடராஜர், அந்த கோவிந்தராஜனுக்கு நல்ல விசாலமான இடத்தையே ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். நிலாத் திங்கள் துண்டப் பெருமாளோ ஏகம்பரர் கோயிலுக்குள்ளே இடம் பிடித்துக் கொள்கிறார். இப்படியே சிக்கலில், பவானியில் இன்னும் பலதலங்களில் இருவரும் சேர்ந்தே வாழ்கிறார்கள் ஒரு கூரையின் அடியிலே.

இவர்களுக்குள் எவ்வளவு சௌஜன்யம் நிலவியது என்பதற்கு எத்தனையோ கதைகள். வேலைவெட்டி ஒன்றும் இல்லாத நேரத்தில் இருவரும் சொக்கட்டான் ஆடவும் கிளம்பியிருக்கிறார்கள். இப்படிச் சொக்கட்டான் சதுரங்கம் ஆடும்போது ஒரு கஷ்டம். வெற்றி தோல்வியை நிர்ணயிக்க இருவரும் அன்னை பார்வதியை நடுவராக இருக்கவேண்டுகிறார்கள். அப்படி வேண்டிக் கொண்டு, கடைசியில் விஷ்ணு வெற்றிபெற, அப்படி அவரே வெற்றிபெற்றார் என்று தீர்ப்புக்கூறியதற்காக இந்தச் சிவன் தம் மனைவியாம் பார்வதியோடு பிணங்கிக்கொண்டு பல நாட்கள் இருந்திருக்கிறார். இந்தப் பிணக்கெல்லாம் கொஞ்சநேரத்துக்குத்தானே. அன்னையின் சக்தி இல்லாவிட்டால் ஐயனுக்குக் காரியங்கள் நடப்பதேது? ஆதலால் இருவரும் பின்னர் இணங்கியே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் இணங்கியபின், அத்தானும் அம்மாஞ்சியுமே இணைந்து வாழ்வதில் வியப்பில்லைதானே. இப்படியே வேதபுரி ஈசுவரராம் சிவபெருமானும் ஆமருவிப் பெருமானாம் விஷ்ணுவும் இணைந்து வாழும் தலமே தேரழுந்தூர் என்னும் திரு அழுந்தூர். அத்தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

இந்தத் தேரழுந்தூர் மாயூரத்துக்குத் தென் மேற்கே ஆறு மைல் தொலைவில் உள்ள குத்தாலத்துக்குத்