பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/235

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
233
 

தென்கிழக்கே மூன்று மைல் தூரத்தில் இருக்கிறது. மாயூரம்-தஞ்சைப் பாதையிலிருந்து ஒரு நல்ல ரோடு ஊருக்கு அழைத்துச் செல்லும். மாயூரத்துக்கும் குத்தாலத்துக்கும் இடையே ரயில்வேக்காரர்கள் ஒரு சிறு ஸ்டேஷன் அமைத்திருக்கிறார்கள். அதோடு அந்த ஸ்டேஷனில் 'தேரழுந்தார் - கம்பன் மேட்டுக்கு இங்கே இறங்குங்கள்' என்று நல்ல ரஸனையோடு ஒரு போர்டையும் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். (ஆம், சொல்ல மறந்து விட்டேனே, இந்தத் தேரழுந்தூர்தான் கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊர்) ஸ்டேஷனில் எல்லா ரயிலும் நிற்காது, சக்கடா வண்டி போலப் போகும் பாசஞ்சர், ஷட்டில்கள் மாத்திரமே நிற்கும். ஆதலால் போட் மெயிலில் வருபவர்கள் எல்லாம் மாயூரத்தலே இறங்கி வண்டி பிடித்துப் போகவேணும். காலில் தெம்புள்ளவர்கள் தேரழுந்தூர் ஸ்டேஷனிலிருந்து நடக்கலாம். தெம்பு இல்லாதவர்களுக்கு என்றுதான் கொம்பு இல்லாத மொட்டை மாடுகள் பூட்டிய வண்டிகள் தயாராயிருக்குமே. ஆதலால் வண்டியேறியே ஊர்போய்ச் சேரலாம். போகும்போதே வண்டிக்காரனிடம் ‘ஏன் இந்த ஊருக்குத் தேரழுந்தூர் என்று பெயர் வந்தது?' என்று விசாரிக்கலாம். உபரிசரவசு என்ற ஒரு அரசன். அவனுக்கு ஒரு தேர். அந்தத் தேரோ வானவீதியிலேயே உருண்டு ஓடும் தன்மையுடையது. இந்த அரசன் கீழே பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார் என்பதை மதியாமல் அவர் தலைக்கு மேலே வானவீதியிலே தேரைச் செலுத்தியிருக்கிறான். பெருமாள் சும்மா இருந்தாலும், அவரது பெரிய திருவடியாம் கருடாழ்வார் சும்மா இதைச் சகித்துக் கொண்டிருப்பாரா? தம்முடைய மந்திர சக்தியால் தேரைக் கீழே இழுத்துப் பூமியில் அழுந்த வைத்து விடுகிறார். பின்னர் உபரிசரவசு பெருமானை வணங்கி மன்னிப்புப் பெற்றுத்தேரோடு திரும்பியிருக்கிறான். (பதினைந்து வருஷங்களுக்கு முன் நான் இந்த ஊர் போகும்போது, நான் சென்ற வண்டி, அங்குள்ள மண்ரோட்டில் அழுந்திக் கொண்டது. அப்போது