பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/236

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
234
வேங்கடம் முதல் குமரி வரை
 

நான் இந்த உபரிசரவசுவைப்போல் பெருமாளை மதியாது நடந்தவன் அல்லவே, ஏன் நம் வண்டி அழுந்தவேண்டும்?" என்று நினைத்தேன். பெரிய திருவடியையும் பிரார்த்தித்துக் கொண்டேன். அழுந்திய வண்டி கிளம்பிற்று. இப்போதெல்லாம் அந்தக் கஷ்டம் இல்லை. நல்லதார்ரோடு அல்லவா போட்டிருக்கிறார்கள் நெடுஞ்சாலைப் பொறியாளர்கள்) இந்தத் தேரழுந்திய கதையைவிட இங்கு திரு வந்து அழுந்தியிருக்கிறது என்று சொல்லவே நான் ஆசைப்படுகிறேன். கம்பன் பிறந்த ஊர் திரு அழுந்திய ஊராக இல்லாமல், தேர்மட்டும் அழுந்திய ஊராகவா இருக்கும்?

நம்மை ஏற்றிச் செல்லும் வண்டிக்காரன் ஊருக்குள் நம்மைக் கூட்டிச் சென்றதும், நடுரோட்டில் நிறுத்திவிட்டு, ஒரு பிரச்சினையைக் கிளப்புவான். அவன் எழுப்பும் பிரச்சினை எந்தக் கோயிலுக்கு முதலில் போகவேண்டும் என்பதுதான், நாம் வண்டியிலிருந்து இறங்கினால் மேற்கே ஒரு கோபுரம் தெரியும். கிழக்கே ஒரு கோபுரம் தெரியும். கிழக்கேயுள்ள கோயில் வேதபுரி ஈசுவரராம் சிவன் கோயில். இவர் மேற்கே பார்க்க இருக்கிறார். மேற்கேயுள்ள கோயில் ஆமருவிப்பெருமாள் கோயில். இவர் கிழக்கே பார்க்க நிற்கிறார். இருவருக்கும் இடையில், உள்ள சந்நிதித் தெருவின் நீளம் எல்லாம் இரண்டு பர்லாங்கு தூரமே. ஒருவரையொருவர் எதிர்நோக்கியே இருக்கிறார்கள். ஆம்; அன்று எதிர் எதிராக இருந்துதானே சதுரங்கம் ஆடியிருக்கிறார்கள். எந்த மூர்த்தியை முதலில் சென்று காண்பது என்ற தீர்மானத்துக்கு வரமுடியாமல் தவிப்போம் கொஞ்சநேரம். அந்த நேரம் அங்குள்ள தேரடிப்பக்கம் ஒரு சிறு கோயில் தெரியும். அந்தக் கோயிலில் இருப்பவர் வழிகாட்டி விநாயகர் என்பார்கள். அவரிடமே வழிகாட்டும்படி கேட்கலாம். ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்னே இத்தலத்துக்கு எழுந்தருளிய, ஞானசம்பந்தருக்குமே இவர்தான் வழிகாட்டியிருக்கிறார்.